அரசு உயர்பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு!

அரசு உயர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் நிராகரிக்கப்படுவதாக மத்திய அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மத்திய அரசு உயர்பதவிகளில் மத்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையம்( யுபிஎஸ்சி) மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆர்எஸ்எஸ் மூலம் உயர்பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியுள்ளதாவது:-

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களின் முக்கிய பதவிகளில் நேரடி சேர்க்கை மூலம் அதிகாரிகள் பணியமர்த்தப்படுவதால், எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீடு பறிக்கப்படுகிறது. மத்திய குடிமைப் பணிகள் தேர்வு ஆணையம்( யுபிஎஸ்சி) மூலம் அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படாமல், ஆர்எஸ்எஸ் மூலம் உயர்பதவிகளில் அதிகாரிகள் நியமிக்கப்படுவதன் மூலம் அரசமைப்பின் மீது நரேந்திர மோடி தாக்குதல் நடத்தி வருகிறார்.

இந்தியாவின் அனைத்து உயர் பதவிகளிலும் ஒடுக்கப்பட்டோருக்கு உரிய அங்கீகாரமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். இந்த நிலையில், நேரடி சேர்க்கை நியமன நடவடிக்கைகளால் மேற்கண்ட பிரிவினர் உயர்பதவிகளிலிருந்து மேலும் விலக்கி வைக்கப்படுகின்றனர்.

மேற்கண்ட நடவடிக்கையானது, யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வரும் திறமையான பல இளைஞர்களின் உரிமைகள் திருடப்படுவதற்கு சமமாகும். அதுமட்டுமன்றி, ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உள்ளடக்கிய சமூக நீதி என்ற கோட்பாட்டின் மீதான தாக்குதல் இது.

நிர்வாக அமைப்புக்கும் சமூகநீதிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் இத்தகைய தேச விரோத நடவடிக்கையை இந்தியா கூட்டணி வன்மையாக எதிர்க்கும். ‘ஐஏஎஸ் தனியார்மயமாக்கப்படுதல்’ – இதுவே இடஒதுக்கீட்டுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கான மோடியின் உத்தரவாதம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.