தலித் ஒருவர் முதல்வராவதை வரவேற்கிறோம் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி இளைஞர் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இளைஞர் அணியின் மாநில செயலாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் திருச்சியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
பிகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற்றதை போல் தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி அனைத்து மக்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முறையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பாலஸ்தீன் காசாவில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவத்தின் அத்துமீறலால் இதுவரை 16,500 பேர் பச்சிளம் குழந்தைகள் உள்பட 40,000க்கும் அதிகாமானோர் உயிரிழந்துள்ளனர். கொடூர தாக்குதலை நடத்தி அப்பாவி பென்களை, குழந்தைகளை, வயதானவர்களை, பத்திரிக்கையாளர்களை கொடூரமான முறையில் இனப்படுகொலை செய்யும் ஆக்கிரமிப்பு இஸ்ரேலையும், அதற்கு துணையாக ஆயுதங்களை வழங்கி ஆதரவு அளித்துவரும் அமெரிக்காவையும், முறையாக எந்த முயற்சியும் எடுக்காத ஐ.நா சபையையும் இச்செயற்குழு வண்மையாக கண்டிக்கிறது. மேலும், ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு வர்த்தக ரீதியான தொடர்பு என்ற பெயரில் ஆயுதங்களை அனுப்புவதை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும்.
இந்தியா முழுவதும் விசாரணை என்ற பெயரில் என்.ஐ.ஏ அமைப்பு அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைத்து தொடர்ந்து அத்துமீறியும், அவர்களது வாழ்வை கேள்வி குறியாக்கியும் வருகிறது. எனவே, ஒழுங்கான ஆதாரமில்லாமல் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி இஸ்லாமிய இளைஞர்களை குறிவைப்பதை என்ஐஏ உடனடியாக நிறுத்த வேண்டும்.
தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீட்டில் பல குளறுபடிகள் நடைப்பெற்று வருவதாக சந்தேகம் எழுகிறது. எனவே, உடனடியாக தமிழக அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப் பட்டிருக்கிறதா என விசாரனை செய்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தமிழகத்தில் தற்போது இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வரும் 3.5 % இட ஒதுக்கீட்டை, 7 சதவீதமாக தமிழக அரசு உயர்த்தி வழங்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தினரின் மத நம்பிக்கையை குழைக்கும் வகையில் கொண்டு வரப்பட உள்ள பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது எனவும், இப்படி மத பிரிவினைகள் உண்டாக்கும் சட்டங்களை தாக்கல் செய்யக்கூடாது என மத்திய அரசை வலியுறுத்துகிறோம். ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
செயற்குழுக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நிகழாண்டு டிசம்பர் இறுதிக்குள் மமக சார்பில் 100 இடங்களில் இருசக்கர வாகன பேரணி நடத்தி, 10 லட்சம் இளைஞர்களை சந்தித்து போதைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றிவிட்டு பிரதமர் மோடி ஆற்றிய உரை அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளுக்கு எதிராக வேற்றுமையில் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமைந்து உள்ளது. வகுப்புவாத சிவில் சட்டங்களை எதிர்ப்பதாக மோடி கூறுகிறார். மத சார்பற்ற சிவில் சட்டங்களை கொண்டு வரப்போவதாக கூறியுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள 9.4 லட்சம் ஏக்கர் வக்பு நிலங்களை அபகரிக்க வக்பு திருத்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தார். இந்நிலையில் இண்டியா கூட்டணி கண்டனம் மற்றும் பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், லோக் ஜனசக்தி கட்சி ஆட்சேபனை காரணமாக வக்பு திருத்த சட்டம் நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
பிரதமரின் சுதந்திர தின உரை அரசியல் கட்சி தலைவரின் உரை போலவும், மத தனியார் சட்டங்களை இலக்கு வைத்து அவர் ஆற்றிய உரையாகவும் உள்ளது. அரசியல் அமைப்பு சட்டம் 25-ன் படி இந்திய குடிமக்களுக்கு எந்த மதத்தையும் பின்பற்றவும், கடைபிடிக்கவும், பிறருக்கு எடுத்துரைக்கவும் உரிமை உள்ளது. அதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மோடி உரை உள்ளது. இதனை இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் எதிர்க்க வேண்டும். எதிர்க்க வேண்டும் என நாங்கள் இண்டியா கூட்டணியை வலியுறுத்துவோம்.
50 ஆண்டு காலம் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத பெரும் தலைவராக, சமூக நீதியை நிலை நாட்டிய தலைவராக, விளிம்பு நிலை மக்களை தூக்கி விட்ட தலைவரான கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயம் முதல்வர் கோரிக்கையை ஏற்று ஒன்றிய அரசு வெளியிட சம்மதித்து இருபது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.
தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார். பத்தாண்டுகள் அதிமுக அரசின் செயல்பாட்டை ஒப்பீட்டளவில் பார்க்கும்போது திமுக அரசின் 3 ஆண்டுகால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறைவு. அதிமுக ஆட்சி காலத்தில் ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் நடைபெற்ற சட்டம் ஒழுங்கு சீர்குழைவுதான் தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த உட்சபட்ச சீர்குலைவு என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் முஸ்லிம்களுக்கன 3.5 இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டும். அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ஒவ்வொரு மாநில அரசும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் ஆகிய அனைவருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதற்கான வழி பிறந்து உள்ளது. எனவே மக்கள் தொகைக்கு ஏற்ப அனைத்து பிரிவினருக்கும் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
திருமாவளவன் எந்த சூழ்நிலையில் தலித் ஒருவர் தமிழகத்தின் முதல்வராக வர முடியாது என கருத்து சொன்னார் என்பதை முழுமையாக எடுத்துக் கொள்ளாமல் அவர் பேசிய ஒரு கருத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பரப்புரை செய்வது தவறு. தமிழ் நாட்டில் தலித் மக்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் முதல்வர் ஆவதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.