எதிரும், புதிருமாக இருந்த திமுக, பாஜக ஆளுநர் தேநீர் விருந்து, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நிகழ்ச்சி மூலம் ரகசிய கூட்டணி அமைத்திருப்பதாக அதிமுக புகார் கூறியுள்ளது. இது அரசியல் நாகரீகம் என்று திமுகவினர் விளக்கமளித்தனர். இந்நிலையில், பாஜக மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் தன் விளக்கத்தை பதிவு செய்துள்ளார்.
திமுக மற்றும் கூட்டணிகள் கட்சிகள், அதிமுவை பாஜகவின் பி டீம் என்று விமர்சனம் செய்வது வழக்கம். ஆனால் ஆளுநர் தேநீர் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டது, கருணாநிதி நூற்றாண்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், அண்ணாமலை கலந்து கொண்டது போன்ற சம்பவங்களால் அது அப்படியே பூமரங்காக திமுகவுக்கு எதிராக திரும்பியுள்ளது. ஆளுநர் தேநீர் விருந்து, கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீடு நிகழ்ச்சிகள் மூலம் திமுக – பாஜக ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்நிலையில் மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலைஞர் கருணாநிதிக்கு மட்டுமல்ல, அம்பேத்கர், காமராஜர், எம்.ஜி.ஆர், அப்துல் கலாம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களுக்கும் நாணயம் வெளியிட்டுள்ளோம். அவர்கள் செய்த சேவைக்காக மட்டுமே நாணயம் வெளியிடப்படுகிறது. அதன்படி கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழா அரசியலுக்கு அப்பாற்பட்டது. தமிழ்நாடு அரசின் அழைப்பின் பேரில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். இதில் அரசியலுக்கு எல்லாம் இடமில்லை. இந்த நிகழ்ச்சி தொடர்பாக நாளிதழ்களில் தமிழ்நாடு அரசு தான் விளம்பரம் கொடுத்திருந்தது. நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் நன்றி உரை தெரிவித்தார். கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவை தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்தது. மத்திய அரசு நாணயத்துக்கு ஒப்புதல் அளித்தது. அவ்வளவுதான்.
சத்தீஸ்கரில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை பாஜக முதலமைச்சராக்கியுள்ளது. அதேபோல ராஜஸ்தான் மற்றும் மத்தியப்பிரேசத்தில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை துணை முதலமைச்சராக்கியுள்ளோம். வாய்ப்புள்ள இடங்களில் பாஜக தலித், பட்டியலின மக்களுக்கு அதிகாரம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக இருப்பதில் கூட மூன்றாவது இடத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் மூன்று பட்டியல் இன அமைச்சர்கள் உள்ளனர். புரோட்டோகால் அடிப்படையில் அவர்கள் கடைசியில் இருந்து மூன்றாவது இடத்தில் உள்ளனர். தமிழ்நாட்டில் தலித் மக்களின் நிலை இதுதான். இதைப்பற்றி பேசுபவர்களும் திமுக கூட்டணியில் தான் இருக்கின்றனர். திருமாவளவன் குறிப்பிட்ட சமுதாயத்தின் தலைவராகத்தான் தன்னுடைய கருத்துகளை சொல்லிக் கொண்டிருக்கிறார். 3 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் கூட அவரின் கருத்து அவர் ஒட்டு மொத்த தலித் மக்களின் தலைவராக வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
அரசியலுக்காக மட்டுமே மத்திய அரசு என்பதை திமுகவினர் ஒன்றிய அரசு என கூறி வருகின்றனர். அப்படி கூறுவதால் நாங்கள் குறைந்துவிட போவதில்லை. நாங்கள் இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கப் போகிறோம். அவர்கள் இதை விட்டு ஆக்கபூர்வமான அரசியலில் ஈடுபட முன்வரவேண்டும். ஸ்ரீபெரும்புதூரில் திறக்கப்பட்ட மகளிர் விடுதி மத்திய அரசின் நிதியால் கட்டப்பட்டது. மத்திய அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் தமிழக அரசின் வேலை. அரசியலுக்காக மத்திய அரசின் நிதி மற்றும் திட்டங்களை தமிழக அரசு மறைத்து வருகிறது. 10 ஆண்டுகளில் ரூ.11 லட்சம் கோடி நிதி தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்ததது. மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு வழங்கப்பட்ட நிதி கணக்கை தமிழக அரசு சமர்ப்பிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.