மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது: ஜி.கே.வாசன்

நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை எனில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுக்கக் கூடாது என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த சிலம்பவேளாங்காடு கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ். கடந்த 2021ஆம் வருடம் 12ஆம் வகுப்பு படித்து முடித்து, இரண்டு ஆண்டுகளாக ‘நீட்’ தேர்வு எழுதி வந்தார். எனினும், அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த நிலையில் நேற்று முன் தினம் காலை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். 2017 ஆம் ஆண்டு அரியலூர் மாணவி அனிதா தொடங்கி, இதுவரையில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழ்நாட்டில் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு என அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தஞ்சாவூர் சிலம்ப வேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் மனம் வருந்தி, உயிரை மாய்த்துக்கொண்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. மாணவர் உயிரை மாய்த்துக்கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் தாங்கள் எழுதும் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை, அதிக மதிப்பெண் பெறமுடியவில்லை என்றால் அதற்காக உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சிக்கக்கூடாது என்றும், தொடர்ந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற முயற்சிக்கலாம் அல்லது அடுத்தக்கட்ட கல்விக்கு முயற்சிக்க வேண்டும் என்றும் கூறிய ஜி.கே.வாசன் அதை விடுத்து உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்தால் தங்களுக்காக பாடுபட்ட பெற்றோர் மனம் நொந்து, மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.

மேலும், “மாணவர்களே நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள், தேர்வு எழுதுங்கள் குறைந்த மதிப்பெண்ணோ, தோல்வியோ எக்காரணத்திற்காகவும் உயிரை மாய்த்துக் கொள்ள கூடாது. மாணவச் செல்வங்களே உங்களுக்கு குடும்பத்தினர், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் துணையாக இருக்கிறார்கள் என்பதை மனதில் வைத்து, அடுத்த வாய்ப்புகள் உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள்” என்றும் தனது அறிக்கையில் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.