சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடி ஏற்கனவே அமைச்சர் பதவியை இழந்த நிலையில், உச்சநீதிமன்றம் சென்று பதவியை காப்பாற்றிக்கொண்டார். இந்நிலையில் மற்றொரு சொத்துக்குவிப்பு வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று இறுதி விசாரணை செய்தது. அப்போது பொன்முடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
கடந்த 2006 முதல் 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர் கல்வித்துறை அமைச்சராகவும், கனிம வளத்துறை அமைச்சராகவும் பதவி வகித்த பொன்முடி. இவருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக ரூ.1.75 கோடி அளவுக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி, இருவரையும் விடுதலை செய்து 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்றம்: இந்த தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2017ம் ஆண்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சியை விடுதலை செய்து, விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், அமைச்சராக இருந்த காலகட்டத்தில் பொன்முடி, 64.90 சதவீத அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது நிரூபணம் ஆகியுள்ளதாக கூறிய நீதிபதி, இருவருக்கும் தலா மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தை செலுத்த தவறினால் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை 30 நாட்கள் நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இதனால் பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். உத்தரவை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், நீதிபதிகள் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். எனவே அவர் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இப்படி இருக்கையில் கடந்த 1996 -2001 காலத்தில் வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக முடித்து வைக்கப்பட்ட வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறது. அதாவது 1996 -2001 காலகட்டத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி, தனது அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.36 கோடி சொத்து குவித்ததாக வழக்கு இருந்தது. சென்னை உயர்நீதிமன்றம்: இந்த வழக்கு நீண்ட காலமாக விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் வேலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பில், பொன்முடியும் அவரது மனைவியும் விடுவிக்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கைதான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறார். அதாவது விசாரணை முறையாக நடைபெறவில்லையென கூறி, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாமாக முன்வந்து இவ்வழக்கை மறுஆய்வுக்கு எடுத்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. இதில் நீதிபதி உத்தரவு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது. அப்போது விசாரணையின் போது, பொன்முடி தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி இந்த வழக்கை ஒத்தி வைத்தார். அதாவது வரும் செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.