அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் ஆகஸ்ட் 27ல் குற்றச்சாட்டு பதிவு!

ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு மனை ஒதுக்கீடு முறைகேடு வழக்கை, குற்றச்சாட்டுகள் பதிவுக்காக ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

முந்தைய திமுக ஆட்சியில் வீட்டு மனை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை அமைச்சராக தற்போதைய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் விருப்புரிமை ஒதுக்கீட்டின் கீழ் அப்போது ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த ஜாபர் சேட்டின் மனைவி பர்வீன் உட்பட சிலருக்கு திருவான்மியூரில் 3,457 சதுர அடி மற்றும் 4,763 சதுர அடி வீட்டு மனைகளை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த நிலங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டி கோடிக்கணக்கில் லாபம் சம்பாதித்ததாக, அப்போதைய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ஜாபர்சேட், அவரது மனைவி பர்வீன், க.முருகையா, கே.ராஜமாணிக்கம், ஆர்.துர்கா சங்கர் உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை, கடந்த 2013 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர மற்றவர்களில் சிலரை விடுவித்தும், சிலர் மீதான வழக்கை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கு சென்னை எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் ஐ.பெரியசாமி நேரில் ஆஜராகவில்லை. அவர் தரப்பில், ஆஜராக விலக்கு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, குற்றச்சாட்டு பதிவுக்காக வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.