மின் வாரிய கேங்மேன் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மாநகரம் முதல் கிராமங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் மின்சார சேவை உள்ளது. அனைத்து வீடுகளுக்கும் மின் பகிர்மான கழகம் மூலமாக 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 3 கோடிக்கும் அதிகமாக மின் இணைப்புகள் உள்ளன.
தடையில்லா மின்சார சேவையை வழங்க மின்சார வாரியத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மின் வாரியத்தில் கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளராக அறிவிக்க வேண்டும் உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நிலவும் 63 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கேங்மேன் தொழிலாளர்களை கள உதவியாளர்களாக நியமிப்பதோடு சொந்த மாவட்டத்திலேயே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மின் வாரிய தலைமை அலுவலகம் முன்பாக கேங்மேன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியுள்ளன.
கேங்மேன் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மின்சார வாரிய நிர்வாகக் குழு அனுமதி வழங்கியதாகவும், அவர்களுக்கான பணிநியமன ஆணை வழங்காமல் காலம் தாழ்த்தும் மின்சார வாரியத்தின் அலட்சியப்போக்கே, தற்போது கேங்மேன் தொழிலாளர்கள் மாநில அளவில் திரண்டு போராடும் அளவிற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து, மழை, வெள்ளம், உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள் காலங்களிலும் மக்களுக்கு தேவையான மின் விநியோகத்தை வழங்குவதற்காக தன் உயிரைப் பணயம் வைத்து இரவு, பகலாக பணியாற்றும் கேங்மேன் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள கேங்மேன் தொழிற் சங்கத்தின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.