கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்ச நீதிமன்றம் வரும் வியாழக்கிழமைக்குள் வழக்கு விசாரணை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்ஜி கார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பயிற்சி டாக்டராக 31 வயது நிரம்பிய பெண் பணியாற்றி வந்தார். இவர் மருத்துவ மேற்படிப்பை படித்து பயிற்சி டாக்டராக இருந்தார். இவர் கடந்த 8 ஆம் தேதி இரவு பணியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது, அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள கருத்தரங்க கூடத்தில் அரை நிர்வாணமாக பெண் பயிற்சி டாக்டர் சடலமாக கிடந்தார். உடற்கூறாய்வில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். தற்போது சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இதற்கிடையே, பெண் பயிற்சி டாக்டர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்தது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இது கொல்கத்தா பிரச்சினை மட்டுமல்ல, இது ஒட்டு மொத்த மருத்துவர்களின் பிரச்சினை. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் புகைப்படம் எப்படி சமூக வலைத்தளங்களில் வெளியானது? இதனை எப்படி கையாண்டிருக்க வேண்டும். பாதிப்புக்கு உள்ளான பெண் மருத்துவரின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகி உள்ளது வருத்தமளிக்கிறது. இது தான் உயிரிழந்த பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா?
பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும். மருத்துவர்களுக்கே பாதுகாப்பான நிலை இல்லை என்பதையே இது காட்டுகிறது. பணிபுரியும் இடங்களில் மருத்துவர்களின் பாதுகாப்பு பிரச்சினைக்கு உரியதாகவே உள்ளது. பயிற்சி மருத்துவரின் உயிரிழப்பானது மருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்புகிறது. மருத்துவர்களுக்கு பாதுகாப்பான நிலைமை இல்லாதது ஆழ்ந்த கவலை அளிக்கிறது. கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். வரும் வியாழக்கிழமைக்குள் முழு அறிக்கையையும் தாக்கல் செய்யவேண்டும். மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும்.
மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க மேற்கு வங்க அரசு தவறிவிட்டது. மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு கூட சுகாதாரமான சூழல் இல்லை. சில மருத்துவமனைகளில் மருத்துவர்கள் 36 மணி நேரம் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். கண்காணிப்பு கேமிரா கூட இல்லாமல் இருந்ததா? என்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க ஏன் தாமதம் ஆனது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து அடுத்த விசாரணை நாளை மறுநாளுக்கு ஒத்தி வைத்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.
பல்வேறு பின்னணிகளை கொண்ட மருத்துவர்கள் அடங்கிய குழுவை நாங்கள் அமைக்கிறோம்.. என்று கூறிய உச்ச நீதிமன்றம் குழுவில் இடம் பெற்ற மருத்துவர்களின் விவரத்தையும் வெளியிட்டது. அதன் விவரம் வருமாறு:-
அறுவை சிகிச்சை நிபுணர் வைஸ் அட்மிரல் ஆர் சரின், டாக்டர் டி நாகேஷ்வர் ரெட்டி, டாக்டர் எம் ஸ்ரீனிவாஸ், டாக்டர் பிரதிமா மூர்த்தி, டாக்டர் கோவர்தன் தத் பூரி, டாக்டர் சௌமித்ரா ராவத், பேராசிரியை அனிதா சக்சேனா – கார்டியாலஜி பிரிவு தலைவர், எய்ம்ஸ் டெல்லி பேராசிரியர் பல்லவி சப்ரே – டீன் கிராண்ட் மருத்துவக் கல்லூரி மும்பை டாக்டர் பத்மா ஸ்ரீவஸ்தவா – நரம்பியல் துறை, எய்ம்ஸ். ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.