2026 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து நின்று ஒரு தொகுதியில் வெற்றி பெற முடியுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுடன் பேசியதாவது:-
அரசியலில் முளைத்து மூன்று இலை கூட விடவில்லை அதற்குள் இரட்டை இலையைப் பற்றி அண்ணாமலை பேசுவதா? என கேள்வி எழுப்பிய ஜெயகுமார், அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு நான்கு சட்டப்பேரவை உறுப்பினர்களை பெற்று பேரவைக்குள் வந்ததை மறந்துவிடக் கூடாது. மச்சான்(திமுக) துணையோடு மலையேற முடியும் என அண்ணாலை நினைக்கிறார். அதிக வழக்குகளில் திமுக சிக்கியுள்ளதால் மத்திய பாஜக அரசுக்கு திமுக ஆதரவு அளிக்கிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து நின்று ஒரு தொகுதியில் பாஜகவால் வெற்றி பெற முடியுமா? என்று கேள்வி எழுப்பிய ஜெயகுமார், சொந்தக் காலும் இல்லை, செல்வாக்கும் இல்லாத பாஜக அதிமுகவை பற்றி பேசுவது வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது என்றார்.
மேலும் தவெக தலைவர் விஜய் கொடி ஏற்றுவது கூட திமுகவிற்கு பயம். அவருக்கு எவ்வளவு தடங்கல் கொடுக்க முடியுமோ அவ்வளவு தடங்கல்களை திமுக கொடுக்கிறது. ஜனநாயக நாட்டில் கொடி ஏற்றுவதற்கு எல்லோருக்கும் உரிமை உள்ளது என்று ஜெயகுமார் தெரிவித்தார்.