மக்களின் உடல் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகப்படுத்துவது தொடர்பாக தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
விழாவில், பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தலைமை வகித்தார். ஆவின் மேலாண்மை இயக்குநர் வினீத் உள்பட பலர் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் மனோ தங்கராஜ் பேசும்போது, ”பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் வகையில், கறவைகளுக்கு மூலிகை மருத்துவம் தொடர்பாக விவரங்களை பால் உற்பத்தியாளர்களிடம் களப்பணியாளர்கள் எடுத்துச் செல்ல வேண்டும். நீங்கள் பெற்ற பயிற்சிகளை பால் உற்பத்தியாளர்களிடம் தெரிவிக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியதாவது:-
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட 4 அறிவிப்புகளை இன்று முதல் செயல்படுத்த தொடங்கி உள்ளோம். பசுந்தீவன பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதற்கு விவசாயிகளுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் பசுந்தீவன கரணைகள், விதைகள் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளோம். புதியதாக சங்கங்கள் தொடங்குவோருக்கு தேவையான உபகரணங்கள் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளோம். கடந்த ஆண்டு தினசரி ஆவின் பால் கொள்முதல் 26 லட்சம் அளவுக்கு சரிந்தது. தற்போது 35 லட்சம் முதல் 36 லட்சம் லிட்டர்பால் தினசரி கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் பால் கொள்முதல் உயரும்.
காக்களூர் ஆவின் பண்ணையில் பால் பாக்கெட் உற்பத்தி செய்யும்போது, கன்வேயர் பெல்டில் பெண் பணியாளரின் துப்பட்டா சிக்கியதால் உயிரிழப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த இயந்திரம் மெதுவாக நகரும். எப்படியோ அவரை இழுத்து ஒரு விபத்து நடைபெற்றுவிட்டது. தொழிலாளர் காப்பீடு, தொழிலாளர் வைப்புநிதி மூலமாக அவரது குடும்பத்துக்கு நிவாரணம் கொடுக்க நடவடிக்கை எடுத்து உள்ளோம்.
பண்டிகை காலங்களில் மக்களுக்கு தேவையான பால் மற்றும் பால்பொருட்களை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். புதிய ஆவின் பொருட்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். உடல் ஆரோக்கியத்தை பேணும் விதமாக, மூலிகைகள் சேர்ந்த பால் அறிமுகப்படுத்த தீவிர ஆராய்ந்து வருகிறோம். சுக்குமல்லி காப்பி வழங்குவது தொடர்பாக ஆராந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.