நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு தொழில் மற்றும் வர்த்தகத் துறை சார்பில் சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் சுமார் 17,616 கோடி ரூபாய் முதலீட்டில் 60,000 மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 19 தொழில்திட்டங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும் 51 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் தொழில்துறை வரலாற்றிலும், வளர்ச்சி வரலாற்றிலும் இது மிக மிக முக்கியமான நாள். நம்முடைய பொருளாதாரத் திறனை உலகிற்கு எடுத்துக் காட்டும் நாளாகவும், தமிழ்நாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலம் இருப்பதை உணர்த்தும் நாளாகவும் இந்த நாள் அமைந்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியிருக்கிறோம். மாநாடுகளை நடத்துவதைவிட, அந்த மாநாடுகள் மூலமாக எவ்வளவு முதலீடுகளை ஈர்த்தோம் என்பதில்தான், வெற்றி அடங்கியிருக்கிறது! அந்த மாநாடு மூலமாக நாம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை – 631. ஈர்க்கப்பட்ட முதலீடுகளின் மதிப்பு 6.64 லட்சம் கோடி ரூபாய். இதன் மூலமாக 14 லட்சம் பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மொத்தமாக சொல்ல வேண்டும் என்றால், கடந்த மூன்று ஆண்டுகளில், 31 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், 9 லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்திருக்கிறோம்.
எம்ஓயூ போடுவதோடு நம்முடைய கடமை முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல், அந்தத் தொழில்களை நிறுவுவதற்கு தேவையான ஆதரவு சேவைகளை அளித்துக் கொண்டு வருகின்றோம். அதன் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்து, அந்தத் திட்டங்கள் விரைந்து செயலாக்கப்படுவதை நம்முடைய அரசு உறுதி செய்து கொண்டிருக்கிறது. இதை ஏதோ கடமையாக மட்டும் கருதாமல், தன்னார்வத்துடன் செயல்படுத்திக் காட்டி வரும் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கும், தொழில் துறை அதிகாரிகளுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, இந்த மூன்று ஆண்டுகளில், எண்ணற்ற தொழில் திட்டங்களை தமிழ்நாடு ஈர்த்திருக்கிறது. அதிக முதலீடுகளை ஈர்க்கும் உயர் தொழில்நுட்பம் வாய்ந்த தொழில்களையும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொழில்களையும் ஈர்த்து, அதன்மூலமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்ற தமிழ்நாட்டின் இலக்கை அடைவதற்காக நம்முடைய அரசு முனைப்போடு செயலாற்றி வருகிறது.
ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே வேலைவாய்ப்புகள் பெருமளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அந்தப் பகுதிகள் உறுதியாக சமூக, பொருளாதார வளர்ச்சி பெறும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். திறன்மிகு தொழிலாளர்கள் உள்ள மாநிலம், இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் பெண் தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று பல்வேறு சிறப்பம்சங்களை தமிழ்நாடு கொண்டிருக்கிறது. மாநிலத்தில் பெண்களின் கல்வியறிவும், வேலைவாய்ப்பு விகிதமும், நாட்டின் சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே பெண்களுக்கான மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று உலகம் முழுவதும் தெரியும்.
உட்கட்டமைப்பு தொடர்பான தொழில் துறை வளர்ச்சி, வணிகம் செய்வதை எளிதாக்குவது, சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வாழ்க்கை வசதிகளை எளிதாக்குவது, இவையெல்லாம் அரசின் குறிக்கோள்கள். இதை செயல்படுத்துவதற்காகதான் எங்களுடைய கடமையாக கருதுகிறோம். உலகம் எங்கும் இருக்கும் முதலீட்டாளர்கள் விருப்பத்தோடு தேர்வு செய்யும் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது என்பதற்கு இன்றைய நிகழ்வே ஒரு எடுத்துக்காட்டு. 130-க்கும் மேற்பட்ட ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்கள் தமிழ்நாட்டை தேர்ந்தெடுத்துள்ளதும், தமிழ்நாட்டின் முதலீட்டு ஈர்ப்புத் திறனுக்கு அத்தாட்சியாக விளங்குகிறது.
தமிழ்நாட்டில் நிம்மதியாக தொழில் தொடங்கலாம் என்ற நம்பிக்கை தொழில் துறையினருக்கு வந்துள்ளது. எனவே இங்கே முதலீடு செய்து தொழில் தொடங்குபவர்கள் தமிழ்நாட்டின் தூதுவர்களாக மாறி மற்ற தொழில் நிறுவனங்களையும் அழைத்துவர வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்டும் இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.