டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரிப்பது ஆறுதலை தருகிறது: திருமாவளவன்

பெண் டாக்டர் கொலை வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிப்பது ஆறுதலை தருகிறது என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-

கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டருக்கு எதிராக நடந்த கொடூரம் இன்று நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. வெட்கித் தலைகுனியக்கூடிய ஒரு குரூரமான சம்பவமாக அது நடந்திருக்கிறது. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரிப்பது ஆறுதலை தருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

‘நிர்பயா’ வழக்குக்கு பிறகு, நிர்பயாவின் பெயரிலேயே ஒரு சட்டம் இயற்றப்பட்டதை நாம் வரவேற்றோம். ஆனாலும் மீண்டும், மீண்டும் இந்த அநாகரீக வன்கொடுமை அரங்கேறிக் கொண்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி பேசுகையில், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று தெரிவித்தார். அதனை ஆக்கப்பூர்வமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.