நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ஸ்பெயின் நாட்டு கொடி போல உள்ளது, ஆப்ரிக்கன் யானை, தூங்கு மூஞ்சி பூ என்று அந்த கொடியை வைத்து ஏராளமான விமர்சனங்கள் வெடித்துள்ளன. பலரும் அதை கலாய்த்து வரும் நிலையில் நாம் தமிழர் சீமான் விஜயின் நகர்வை பாராட்டி கொடிக்கு விளக்கமும் கொடுத்துள்ளார்.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. அதில் அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். போராட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சீமான் கூறியதாவது:-
கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கு ஒரு கூட்டு பாலியல் கொலை என்பது எல்லோருக்கும் தெரியும். இதில் ஒருவரை மட்டும் கைது செய்து வழக்கை கொண்டு செல்கின்றனர். கல்லூரி முதல்வர் எதற்காக இதை தொடக்கத்தில் தற்கொலை என்று சொல்ல வேண்டும். 100 குற்றங்களில் 99 குற்றங்கள் போதையில் தான் நடக்கிறது. இதுவரை பெற்ற தீர்வுகள் எல்லாமே போராடி பெற்றவைதான். தானாக எதுவும் நடக்கவில்லை. கொரோனா வரும்போது மருத்துவர்கள் தேவதைகளாக தெரிந்தனர். இப்போது அதே மருத்துவர்கள் தேவையற்றவர்களாக தெரிகின்றனர். இதுபோன்ற செயல்களுக்கு வெட்கி தலைகுனிய வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் தொடரக்கூடாது.
கிருஷ்ணகிரி சம்பவத்தில் சிவராமன் தவறு செய்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவரை காவல்துறையிடம் பிடித்துக் கொடுத்ததே நாம் தமிழர் கட்சி தான். குற்ற உணர்ச்சி ஏற்பட்டிருப்பதால் அவர் இப்படி செய்திருக்கலாம். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்கவுன்டர் செய்ததை நாங்கள் எதிர்த்தோம். சிவராமன் உயிரிழப்பை எதிர்க்கவில்லை. உண்மையை சொல்ல கூடியவர்களை கொன்றதால் அதை எதிர்த்தோம். இது அப்படி இல்லை. அவர் முன்பே எனக்கு வருத்தக் கடிதம் எழுதி, ‘நான் சாகப் போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள்.’ என்று கூறியிருந்தார். அதை நான் தம்பிகளிடம் விசாரிக்க சொல்லியிருந்தேன். அதனால் அவர் மனம் வருத்தப்பட்டு இப்படி செய்திருக்கலாம். எங்களுக்கு இதில் சந்தேகம் இல்லை.
எந்த குற்றத்துக்கும் மரணம் தண்டனை என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஆனால், பாலியல் கொலை போன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க மரண தண்டனை கொடுப்பது கட்டாயம். அப்போதுதான் தவறு செய்பவர்களுக்கு பயம் ஏற்படும். இப்போது பெண் பிள்ளைகளுக்கு அறிவுரை செய்து அனுப்புகிறோம். அதிகாரம் எங்களிடம் வரும்போது, ஆண் பிள்ளைகளுக்கு அறிவுரை சொல்லி அனுப்பும் நிலை வரும். பிக்பாஸில் வருவது போல ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கூறினார்.
தொடர்ந்து நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சி கொடி சர்ச்சையில் சிக்கியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆவேசமாக பதிலளித்த சீமான், “ஸ்பெயினில் மட்டும்தான் யானை இருக்கிறதா. எங்கள் ஊரில் இல்லையா. யானை ஒரு தனி மனிதனுக்கோ, மாநிலத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதா. எங்கள் கட்சி சின்னத்துக்கு புலியை கேட்டபோது தேர்தல் ஆணையம், ‘அது தேசிய விலங்கு’ என்றனர். மயிலை கேட்டபோது, ‘அது தேசிய பறவை’ என்றனர். பிறகு ஏன் பாஜகவுக்கு மட்டும் தேசிய மலரை சின்னமாக கொடுத்தீர்கள் என்று கேட்டதற்கு பதில் இல்லை. எங்கள் முன்னோர்கள் யானைப் படையை வைத்திருந்தார்கள். ராஜ ராஜ சோழன் 60,000 யானைகளை கொண்ட படையை வைத்திருந்தான். இதைப் பார்த்த எதிரி நாட்டுப் படைகள் எதிர்க்காமல் அப்படியே சரணடைந்துவிட்டனர். அப்படியிருக்கும்போது என் தம்பிக்கு யானையை வைக்க உரிமை இல்லையா.
யானைப் படையை வைத்து வெற்றி வாகை சூடுவது எங்கள் மரபு. புறநானூறு படித்தால் வரலாறு தெரியும். அது அவர் கொடி. அவர் பிரச்னை. உங்களுக்கு என்ன பிரச்னை. தமிழ் ஈழ அரசியலை நான் மட்டும்தான் பேச வேண்டும் என்றில்லை. யார் வேண்டுமானாலும் பேசலாம். தமிழரின் பண்பாட்டு நீட்சி தான் நமக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் விஜயின் நகர்வை நான் வரவேற்கிறேன். இதை நீங்களும் பாராட்ட வேண்டும். என் தம்பி செய்யாத சில அரசியலை அண்ணன் நான் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.