ஆம்ஸ்ட்ராங் கொலையில் நெல்சனிடம் போலீஸ் விசாரணையா?

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து பிரபல இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தன்னிடம் போலீசார் விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் கூட போலீசார் அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் நெல்சன்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெட்டி கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆர்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, பெண் தாதா மலர்கொடி, கஞ்சா விற்பனை செய்த அஞ்சலை, ஹரிதரன், இது போன்றவர்கள் மட்டுமல்லாது அதிமுக, திமுக, பாஜக, தாமாக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் சீசிங் ராஜா, சம்போ செந்தில் உள்ளிட்ட பல பயங்கர ரவுடி கும்பல்கள் ஒன்றாக சேர்ந்து இந்த கொலையை அரங்கேற்றி இருக்கிறது. குறிப்பாக இந்த கொலை வழக்கில் சிசிங் ராஜா, சம்போ செந்தில் ஆகியோர் தலைமறைவாக இருக்கின்றனர் என்கின்றனர் போலீசார்.

இந்த நிலையில் இந்த வழக்கில் சம்பவம் செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனும் தலைமறைவானார். வழக்கறிஞரான இவர், தனது குடும்பத்துடன் தாய்லாந்துக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரௌடி மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்பில் இருந்ததாக இயக்குனர் நெல்சன் திலீப் குமாரின் மனைவியான மோனிஷாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணனுடன் தொடர்ந்து பலமுறை மோனிஷா தொலைபேசியில் பேசியிருக்கிறார். இதை அடுத்து அதனை கண்டறிந்த போலீசார் அவரை நேரில் வரவழைத்து எதற்காக பேசினீர்கள்? எத்தனை முறை பேசி இருக்கிறீர்கள்? என விசாரித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மொட்டை கிருஷ்ணன் வழக்கறிஞர் என்பதால் தங்கள் வழக்குகள் தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாகவும் மற்றபடி அவருக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என மோனிஷா விளக்கம் அளித்ததாகக் கூறப்பட்டது.

மேலும், மோனிஷாவும் மொட்டை கிருஷ்ணனும் கல்லூரி நண்பர்கள் எனவும், இருவருக்கும் இடையே பணப்பரிவர்த்தனை நடந்ததாகவும் தகவல்கள் உலாவின. இந்நிலையில் விசாரணைக்கு தான் முழுமையாக ஒத்துழைத்ததாகவும், ஆனால் பணப் பரிவர்த்தனைகள் நடக்கவில்லை என மோனிஷா விளக்கம் தெரிவித்திருந்தார். இதை அடுத்து இது தொடர்பாக மோனிஷாவின் கணவரும் இயக்குனருமான நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குனர் நெல்சன் திலீப் குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது. ஏற்கனவே மோனிஷாவிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் அதே கேள்விகள் மற்றும் அது தொடர்புடைய கேள்விகள் நெல்சனிடம் கேட்கப்பட்டதாகவும், ஆனால் நெல்சன் அளித்த வாக்குமூலம் மற்றும் விளக்கம் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் சுமார் ஒரு மணி நேரம் இந்த விசாரணை நடந்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்புடைய மொட்டை கிருஷ்ணன் குறித்து தன்னிடம் போலீசார் விசாரணை எதுவும் மேற்கொள்ளவில்லை எனவும், விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென சம்மன் கூட போலீசார் அளிக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார் நெல்சன். மேலும் கடந்த 7 ஆம் தேதி தன் மனைவியிடன் சில நிமிடங்கள் மட்டுமே விசாரணை நடத்தியதாகவும், தன்னிடம் விசாரணை எதுவும் நடக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.