தனது தொகுதியிலும் மாணவர்களிடையே போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம்.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள் பழக்கம் அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக ஹான்ஸ், கணேஷ் புகையிலை, கூல் லிப் போன்ற தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே இந்த பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மாணவர்களிடையே போதைப்பொருட்கள் பழக்கம் அதிகமாக இருப்பதாக பத்திரிக்கையாளர் ஒருவர் குற்றம் சாட்டி இருக்கிறார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போதைப்பொருள் பழக்கத்தில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த வாரத் தொடக்கத்தில் ஒன்பதாம் வகுப்பு பெண் மாணவி ஒருவர் தனது வகுப்பறையில் பீர் குடித்து தனது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். ஏழாம் வகுப்பு படிக்கும் அவரது சகோதரன் அந்த மாணவிக்காக பீரை வாங்கி கொடுத்திருக்கிறார். இதேபோல சில நாட்களுக்கு முன்பு மூன்று பத்தாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி வளாகத்திலேயே பீடி புகைக்க முற்பட்டபோது ஆசிரியர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் கூல் லிப் போன்ற புகையிலைப் பொருட்கள் மாணவர்களிடையே அதிகமாக புழக்கத்தில் இருப்பதால் போதைப் பொருள் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
பெங்களூரிலிருந்து கொண்டுவரப்படும் புகையிலை பொருட்கள் மாணவர்களுக்கு 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு பாக்கெட்டில் 25 கூல் லிப் பாக்கெட்டுகள் இருப்பதாகவும், மதிய உணவுக்கு பிறகு மாணவர்கள் அதனை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்தும் போது சுமார் 45 நிமிடம் வரை அவர்களுக்கு போதை இருப்பதாக கூறப்படுகிறது. மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்தால், அரசும் இதில் தோல்வியை சந்தித்து இருக்கிறது. போதைப்பழக்கம் காரணமாக பள்ளி வளாகம் முழுவதும் பீடி துண்டுகள் கூல் லிப் பாக்கெட்டுகள் கிடக்கிறது. பள்ளியின் ஆய்வகங்கள் மூடி கிடக்கிறது. கழிவறைகளில் தண்ணீர் இல்லை. இதனால் மாணவர்களை தண்ணீர் வாங்கி பயன்படுத்தும் நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர்” எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்த செய்தியை பகிர்ந்துள்ள சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் தனது தொகுதியிலும் இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதாக கூறி இருக்கிறார். அதில் எனது தொகுதியிலும் கூல் லிப் விநியோகம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் தொடர்ந்து சுட்டிக் காட்டியிருக்கிறேன். போதைப் பொருள் பயன்பாடு மற்றும் விநியோகத்தை தடுக்க மாநிலம் முழுவதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக மாணவர்களிடையே குடிப்பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் டாஸ்மாக் கடைகளில் கடுமையான நெறிமுறைகளையும் அமல்படுத்த வேண்டும். மேலும் சிசிடிவி கேமராக்கள் மற்றும் ஆதார் இணைக்கப்பட்ட மது விற்பனை போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.