பதவி வெறியில் மன நலம் பாதிக்கப்பட்டது போல் பேசிய வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனடியாக மனநல மருத்துவமனையில் சேர வேண்டும், அதற்குரிய செலவு முழுவதையும் அண்ணா திமுக ஏற்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் விமர்சித்துள்ளார்.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பெருமாள் கோவிலில் அன்னதான விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை மன அழுத்தத்தில், மனநலம் பாதிக்கப்பட்டது போல் நேற்றைய பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சித்தம் கலங்கியது போல் பேசுவது அவர்களுக்கு தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது, பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார். எந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை, மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம்
கர்நாடகாவில் சேவை செய்துவிட்டு தமிழினத்தை கேவலமாக பேசி இன்று பாஜகவில் நியமன பதவி வைத்துக் கொண்டு வாய்ச் சவடால் பேசும் அண்ணாமலை, உரக்க பேசினால் உண்மையாகி விடாது. அண்ணாமலை கழுதையாக கத்தினாலும் தமிழக மக்கள் உங்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது, ஆட்டோபஸ் அண்ணாமலை ஒரு கவுன்சிலர் பதவியில் நின்று வெற்றி பெற முடியவில்லை. அழிப்பேன் ஒழிப்பேன் என்ற அரசியல் பேச்சு இதுவரை நாங்கள் பார்த்ததில்லை கேட்டதில்லை. கடல் வற்றி கருவாடு திங்கலாம் என்ற காத்திருந்த கொக்கு.? கடைசியில் குடல் வற்றி செத்துப்போனது போல் அண்ணாமலை கனவும் பொய்த்துப் போகும்.
அண்ணாமலையின் பேச்சு தமிழகம் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அத்தனை தமிழர்களையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. நீங்கள் பதவியேற்ற பிறகு பாஜகவில் எந்த தலைவராவது வெளியே தெரிகிறார்களா? பாவம் அந்த அக்கா தமிழிசை வெளியே தெரிவதில்லை. பாஜக அண்ணாமலையை மட்டுமா நம்பி இருக்கிறது எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். எத்தனையோ தலைவர்களை பின்னுக்கு தள்ளி இன்றைக்கு பாஜகவை உருவாக்கியவர் இவர் அப்பா என்பது போலும், அதை வழிநடத்துவர் இவர்தான் என்பது போலும் கட்டமைத்து வருகிறார். அதிமுக கட்சியை டெண்டர் கட்சி என்று கூறுகிறீர்கள். ஆனால் உங்கள் கட்சி தான் டெண்டர் கட்சி. உங்கள் கட்சியில் தான் மோசடி, கட்டப்பஞ்சாயத்து, கொலை , கொள்ளை பின்புலத்தில் உள்ளவர்கள் உங்கள் அடைக்கலத்துடன் பாஜகவில் உள்ளனர். ஒரு பைசா லஞ்சம் வாங்காத அண்ணாமலை தமிழகத்திற்கு என்ன பெற்றுத் தந்திருக்கிறேன் என்று குறிப்பிடுங்கள் நாங்கள் அரசியல் வாழ்க்கையை விட்டு விலகுகிறோம். அரசியல் நாகரிகம் இல்லை.. உழைப்பு இல்லை என எதுவுமே அண்ணாமலைக்கு கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.