தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும் என சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழக பாஜக சார்பில் சென்னையில் ‘தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அண்ணாமலை சிறப்புரையாற்றினார். முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, நாராயணன் திருப்பதி, மாநில செயலாளர்கள் சுமதி வெங்கடேசன், கராத்தே தியாகராஜன், பிரமிளா சம்பத், முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி, பாஜக நிர்வாகி நடிகை குஷ்பு, நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் புவனேஸ்வரி, விளையாட்டு பிரிவு மாநில தலைவர் அமர் பிரசாத் ரெட்டி, மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் பேசினர். இக்கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-
திராவிடக் கட்சிகள் 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னாபின்னமாக்கி உள்ளன. காமராஜர், எம்ஜிஆர் இருவரும் நேர்மையான ஆட்சியை கொடுத்தனர். தற்போது தமிழகம் பின்னோக்கி செல்கிறது. தமிழகத்தில் மட்டும்தான் ஒரு குடும்பத்துக்காக வேலை செய்கிறார்கள். அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு போன்றோர் இருக்கும்போது, அரியணை உதயநிதிக்கு சென்றால் கலவரம் வெடிக்கும் என்பதை ரஜினிகாந்த் தனது பேச்சில் சுட்டிக்காட்டி இருக்கிறார். திமுகவினர் பழநியில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை வேரறுப்போம் எனக் கூறியவர்கள், பழநிக்கு பால்காவடி எடுப்பதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் கலாச்சாரத்தை சீரழித்தவர்களை முருகன் தண்டிப்பார்.
பாஜக தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். நமக்கு திமுக, அதிமுக இருவரும் எதிரிகள்தான். பழனிசாமி என்னைப் பற்றியும், கட்சியை பற்றியும் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். முன்னொரு காலத்தில் சிலுவம்பாளையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் பின்னர் திமுக அமைச்சரின் தயவால் அந்த வழக்கை உடைத்து சிலுவம்பாளையம் பஞ்சாயத்து தேர்தலில் நின்று தோற்றவர்தான் இந்த பழனிசாமி. அதன்பிறகு தவழ்ந்து வந்து முதல்வர் ஆகியிருக்கிறார். எனவே பழனிசாமி என்னை பற்றி விமர்சிக்க தகுதி இல்லை. கூட்டணிக் கட்சி தலைவராககூட பழனிசாமியை நான் ஏற்றது இல்லை. பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். திராவிட கட்சிகளை அகற்ற பாஜகவால் மட்டுமே முடியும்.
உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி முதல் ஊராட்சி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் இடங்களில் பாஜக தனித்து நிற்கும். வரும் செப்.1-ம் தேதி முதல் பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்குகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் 10 லட்சம் பேரையாவது கட்சியில் சேர்க்க வேண்டும். 2 மாதத்தில் 1 கோடி பேரை உறுப்பினர்களாக சேர்ப்பது என்ற இலக்கை எட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பேசுகையில், ஆன்மிகம் பற்றி பேசாதவர்கள், சனாதனத்தை எதிர்த்தவர்கள் எல்லாம் இன்று முருகன் மாநாடு நடத்தி கொண்டு இருக்கிறார்கள். சட்டம் ஒழுங்கு சரி இல்லை என்று சொன்னதற்காக எனக்கான பாதுகாப்பை ஸ்டாலின் நீக்கி உள்ளார். தெலங்கானாவில் சந்திரசேகர் ராவைப் போல இவரும் வீட்டில் அமரப்போகிறார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெறும். தமிழக சட்ட பேரவையில் பிரதமர் மோடி செங்கோல் நிறுவுவார் என்றார்.