முருகன் மாநாடு நடத்தப்படுவது போல இஸ்லாமிய, கிறிஸ்தவம் சார்ந்த நிகழ்ச்சிகளையும் தமிழக அரசு நடத்த வேண்டும் என ஜவாஹிருல்லா வலியுறுத்தி உள்ளார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டனர். முருகன் மாநாடு தொடக்க விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மக்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும் என்றும், அதற்கு திராவிட மாடல் அரசு தடையாக இருக்காது என்றும் தெரிவித்தார். மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திராவிட மாடல் அரசு என்பது எல்லோருக்கும் எல்லாமும் என்பதே என்று தெரிவித்தார்.
திமுக அரசு இந்துக்களுக்கு எதிரானது என்றும், கோயில்கள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்றும் பாஜக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. ஆனால், திமுக ஆட்சியில் தான் அறநிலையத் துறையில் பல்வேறு திட்டங்கள், செயல்பாடுகள் நடந்துள்ளன என விளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் முருகன் மாநாடு தொடர்பான கலவையான விவாதங்களும் எழுந்துள்ளன. மதச்சார்பின்மையை கடைபிடிக்க வேண்டிய அரசு, மதம் சார்ந்த விழாவை நடத்தக்கூடாது என கே.பாலகிருஷ்ணன் தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “ஒரு மதச்சார்பற்ற அரசு அனைத்து மதத்தைச் சேர்ந்த மக்களையும் அரவணைத்துச் செல்கிறது. முத்தமிழ் முருகன் மாநாடு போன்றவை நடப்பது வரவேற்கக்கூடியதுதான். இதேபோன்று சிறுபான்மையினர்களான கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மதங்களின் நிகழ்ச்சிகளையும் நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து, “தமிழக மீனவர்களை தாக்குவது, படகுகளை சேதப்படுத்துவது, வலைகளை அறுப்பது என இலங்கை கடற்படையின் செயல் தொடர்கதையாக நடந்து வருகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என பாஜகவினர் 2014 தேர்தலின்போது சொன்னார்கள். ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆன பிறகும் கூட தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கு ஒரு துரும்பைக் கூட பாஜக அரசு செய்யவில்லை. ஒன்றிய அரசு உடனடியாக தமிழக மீனவர்களை காக்க, மீன்பிடி உரிமையை நிலைநிறுத்த இலங்கை அரசை கடுமையாக எச்சரிக்க வேண்டும். மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.