பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களை தடுத்து நிறுத்த இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் சார்பில்,பாலஸ்தீன மக்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேல்-அமெரிக்காவின் போர் மற்றும் இனப் படுகொலையைக் கண்டித்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்று பேசியதாவது:-
இஸ்ரேல், பாலஸ்தீன மக்களுக்கு எதிராக கடந்த 10 நாட்களாக கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது. பாலஸ்தீனத்தில் இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர்கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர்.
நாட்டின் முதல் பிரதமரான நேரு காலம் தொடங்கி பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்து இந்தியா ஆதரவு நிலை எடுத்தது. ஆனால், இப்போது மத்தியில் உள்ள பாஜக அரசு இஸ்ரேலில் உள்ள இனவெறி அரசுக்கு ஆதரவாக செயல்படுவது, இந்தியாவின் அணி சேரா கொள்கைக்கு நேர் எதிரான கொள்கையாகும். இதுவரை அத்தகைய கொள்கையை நாம் பின்பற்றியது கிடையாது. மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்க வேண்டும். பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். இஸ்ரேலுக்கு கொடுக்கப்படும் ஆயுதங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். அதேபோல், அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்களை கொடுத்து, பாலஸ்தீன மக்களுக்கு எதிராக ஒரு கொடிய குற்றச் செயலை செய்து கொண்டிருக்கிறது.
ஐ.நா. சபை போரை நிறுத்தும்படி இஸ்ரேலை பலமுறை வலியுறுத்தியும், இஸ்ரேல் ஐ.நா. சபையின் உத்தரவுக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வருகிறது. அதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கிறது. அத்துடன், இந்தியாவும் சேர்ந்து ஆதரவு அளிக்கிறது. போரை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ.நா. சபை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். பாலஸ்தீனத்தை அங்கீகரித்து, அந்நாட்டு மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும்.
போர் 10 மாதங்களுக்குப் பிறகு தற்போது தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக, லெபனான் நாட்டுக்குச் சென்ற ஹமாஸ் தலைவர்கள் வான்வழி தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து, போர் தீவிரமடைந்துள்ளது. உலகம் அமைதியாக இருந்தால்தான் எல்லா நாடுகளும் முன்னேறும். போரற்ற உலகத்தை உலகம் காண வேண்டும். அதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில் தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். அங்கு பல்வேறு நகரங்களுக்குச் சென்று தொழிலதிபர்களை சந்திக்கும் அவர், வெளிநாடு வாழ் தமிழர்களையும் சந்தித்து உரையாட உள்ளார். இந்த நிலையில் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், வெளிநாட்டுப் பயணத்திற்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று முதலீட்டாளர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளார். அவரது பயணம் வெற்றிபெற நேரில் சந்தித்து எங்கள் வாழ்த்துகளை தெரிவித்தோம். வேறு எந்த கோரிக்கையும் அவரிடம் வைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்காமல், இஸ்ரேலுக்கு ஆதராவான நிலைபாட்டை எடுத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பாலஸ்தீனத்தை அங்கீகரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறோம். இதனை மத்திய அரசு தவிர்ப்பதோடு, பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முருகன் மாநாடு தொடர்பான பேசிய முத்தரசன், “அண்ணாமலை வாக்குக்காக பேசி வருகிறார். இந்து சமய அறநிலையத் துறை என்பது தமிழக அரசின் தனித் துறை. அது நீதிக் கட்சி ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அந்த துறையின் சார்பில் அமைச்சர் சேகர்பாபு முன் முயற்சி எடுத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளார். தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடாக இது அமைந்துள்ளது. இதில் அரசியல் செய்து தங்களை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று அண்ணாமலை போன்றோர் முயற்சி எடுக்கிறார்கள். அது தோல்வியில்தான் முடியும். கல்வியை காவிமயமாக்க விசிகவும் விடாது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் விடாது. முருகன் மாநாட்டில் அதுபோன்ற தீர்மானங்கள் இருக்குமானால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.
மேலும், கச்சத் தீவு பிரச்னையை பேச வேண்டியவர் பிரதமர் மோடிதான் என்றும், தேர்தல் நேரத்தில் மட்டும் இதுகுறித்து பேசினார், அவர்தான் தற்போதும் பிரதமராக இருக்கிறார் எனவும் கூறிய முத்தரசன், “தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். படகுகள் இலங்கையில் கிடக்கிறது. தமிழக மீன்வர்கள் மீது பிரதமருக்கு அக்கறை இருக்குமானால் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.