நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கட்சி கொடியை வெளியிட்டார். இந்த நிலையில் கட்சியின் மாநாடு எப்போது நடக்கும் என்ற தேதி உறுதியாகி இருக்கிறது. செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்க இருப்பதாகவும், இதற்காக அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நாயகனாக உயர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததோடு பெயரையும் அறிவித்தார். தனது கேரியரின் உச்சத்தில் இருக்கும்போதே நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி கட்சி ஆரம்பித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அதே நேரத்தில் விஜய்க்கு எதிராக விமர்சனங்களும் எழுந்தது. ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது அரசியல் பயணத்தில் உறுதியாக இருக்கும் விஜய் கடந்த ஆண்டு கட்சியின் பெயரை அறிவித்தார். தமிழக வெற்றி கழகம் என கட்சியின் பெயரை அறிவித்ததோடு அதனை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்திருக்கிறார்.
இந்த நிலையில் அவரது கட்சியின் கொடி கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. செப்டம்பர் 5ஆம் தேதி விஜய் நடித்துள்ள கோட் படம் வெளியாக இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக கொடியை வெளியிட்டால் மக்களிடம் சென்று சேரும் என திட்டமிட்டு விஜய் அந்த கொடியை அறிமுகப்படுத்தினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் நிர்வாகிகள் முன்னிலையில் விஜய் கொடியை அறிமுகப்படுத்தினார். சிகப்பு மஞ்சள் வண்ணங்களுடன், நடுவில் வாகை மலர், இரு யானைகள், நீல பச்சை நிறங்களில் நட்சத்திரம் ஆகியவை கொடியில் இடம் பெற்று இருந்தன. கொடியை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே உலகம் முழுவதும் விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றி கழகத்தினரும் அதனை ட்ரெண்ட் ஆக்கினர்.
அதே நேரத்தில் விஜய் கட்சியின் கொடி ஸ்பெயின் நாட்டு கொடியை போல இருப்பதாகவும், பல கொடிகளை இன்ஸ்பயர் செய்து அதனை வடிவமைத்திருப்பதாக விமர்சனம் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் கட்சிக் கொடியை பயன்படுத்தியதாக வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினரும் தங்கள் சின்னத்தை பயன்படுத்தியதாக பகுஜன் சமாஜ் கட்சியினரும் பரபரப்பு புகார் கூறினர். இது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியினர் தேர்தல் ஆணையத்திலும் புகார் அளித்துள்ள நிலையில் விசாரணைக்கு அழைக்கும் போது பார்த்துக் கொள்ளலாம் என விஜய் தரப்பு பேசியிருக்கிறது. சர்ச்சைகள், சிக்கல்கள் ஒரு பக்கம் இருக்க மாநாட்டு பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். செப்டம்பர் 5ஆம் தேதி கோட் படம் வெளியானதுக்கு பிறகு இறுதி வாரத்தில் மாநாடு நடத்தப்படும் என தகவல் வெளியானது. மதுரை, சேலம், ஈரோடு ,திருச்சி என பல பகுதிகளில் மாநாடு நடத்த இடம் பார்த்தும், சரியாக அமையாததால் விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் மாநாடு நடத்த விஜய் முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில் மாநாடு எப்போது நடக்கும் என்பதும் தெரியாமலேயே இருந்தது. இந்த நிலையில் தான் செப்டம்பர் 23ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நடக்க இருப்பது உறுதியாக இருக்கிறது. விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் மாநாடு நடத்த அனுமதிக்க வேண்டுமென தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறார். செப்டம்பர் 23ஆம் தேதி மாநாடு நடக்கும் எனவும் அதற்கு காவல்துறை உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என விழுப்புரம் ஏடிஎஸ்பி இடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்டம்பர் 23ஆம் தேதி விஜயின் தமிழக வெற்றிக்காக மாநாடு நடப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.