திரைத்துறை மட்டுமல்ல மற்ற எந்த துறையாக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என்று குஷ்பு கூறியுள்ளார்.
ஹேமா கமிட்டி அறிக்கையை தொடர்ந்து மலையாளத் திரை உலகில் நடிகர்கள், இயக்குனர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. தொடர்ந்து பல நடிகைகள், இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார்களை அளித்து வருகின்றனர். இதனையடுத்து மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’ நிர்வாகிகள் தங்கள் பதவியை கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மலையாள திரையுலகில் வெடித்துள்ள பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
நமது திரை துறையில் எழுந்திருக்கும் மீடூ விவகாரம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கலாம்.. உங்களை உடைய வைத்திருக்கலாம். தங்களுக்கு இழைக்கப்பட்டு கொடுமைகளை முன்வந்து தெரிவித்த பெண்களுக்கு பாராட்டுகள். பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகளை முறியடிக்க ஹேமா கமிட்டி நிச்சயமாக தேவை. ஆனால் அந்த கமிட்டி உரிய நடவடிக்கைகளை எடுக்குமா? பாலியல் ரீதியான துன்புறுத்தல், பெண்களை தங்களின் இச்சைக்கு இணங்க கேட்பது, பெண்கள் ஒரு தொழிலில் காலூன்ற, அல்லது அவர்களது தொழிலை அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்த்த, பெண்களை படுக்கைக்கு அழைப்பது என்பது எல்லாத்துறைகளிலும் இருக்கிறது. இது போன்ற பிரச்சினைகளை பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் எதிர்கொள்கிறார்கள். ஆனால் அதை பெரும்பான்மையான அளவில் சுமப்பது என்னவோ பெண்கள்தான்.
24 மற்றும் 21 வயதான எனது இரண்டு மகள்களுடனும் இது தொடர்பாக நீண்ட நேரம் உரையாடினேன். அவர்கள் பாதிக்கப்பட்டவர்களின் நிலையை புரிந்துகொண்டு அவர்கள் பக்கம் உறுதியாக நிற்கிறார்கள். இன்று பேசுகிறீர்களோ, நாளை பேசுகிறீர்களோ என்பது முக்கியமல்ல. பேச வேண்டும் அது தான் முக்கியம். உடனடியாக பேசுவது தான், உங்களை அதிலிருந்து மீட்டு, உரிய விசாரணைக்கு வித்திடும்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களையே குற்றம் சாட்டுவது மேலும் பாதிப்பை அதிகப்படுத்தும். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, அவர்களுக்கு எமோஷனலான ஆதரவை கொடுப்பது மிகவும் முக்கியம். இந்த பிரச்சினை குறித்து அந்த பெண் ஏன் முன்பே பேசவில்லை என கேட்பதற்கு முன் சூழல்களைப் பற்றி யோசிக்க வேண்டும். எல்லோருக்கும் சரியான சூழல் அமைந்துவிடுவதில்லை. பெண்ணாக, தாயாக இருப்பவர்களுக்கு இதுபோன்ற வன்முறையால் ஏற்படும் காயம் உடல் அளவில் மட்டுமல்ல மனதளவிலும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
என்னுடைய தந்தை கொடுத்த பாலியல் துன்புறுத்தல் குறித்து பேச ஏன் இத்தனை தாமதம் என பலரும் என்னிடம் கேட்டார்கள். முன்கூட்டியே பேசியிருக்க வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். என்னுடைய கரியரை வளர்ப்பதற்காக நான் ஒன்றும் அமைதியாக இருக்கவில்லை. மாறாக நான் தடுக்கி விழும்போது என்னை தாங்கி பிடிப்பேன் என்று சொன்னவரால் பாதிக்கப்பட்டேன் என்பது தான் காரணம்.
இங்குள்ள அனைத்து ஆண்களிடமும், பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாக நிற்கவும், உங்கள் அசைக்க முடியாத ஆதரவைக் காட்டவும் நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ஆணும் நம்பமுடியாத வலியையும் தியாகத்தையும் தாங்கிய ஒரு பெண்ணுக்கு பிறந்தான். பல பெண்கள் உங்கள் வளர்ப்பில் இன்றியமையாத பாத்திரங்களை வகிக்கிறார்கள், இன்று நீங்கள் இருக்கும் நபராக உங்களை வடிவமைக்கிறார்கள் – உங்கள் தாய்மார்கள், சகோதரிகள், அத்தைகள், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள். உங்கள் ஒற்றுமை நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக, நீதியும் கருணையும் மேலோங்கும் என்பதற்கான அடையாளமாக இருக்கலாம். எங்களுடன் நிற்கவும், எங்களைக் காக்கவும், உங்களுக்கு வாழ்க்கையையும் அன்பையும் கொடுத்த பெண்களை மதிக்கவும். வன்முறைக்கு எதிரான போராட்டத்தில் உங்கள் குரல் ஒலிக்கட்டும், உங்கள் செயல்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் தகுதியான மரியாதை மற்றும் பச்சாதாபத்தை பிரதிபலிக்கட்டும்.
நினைவில் கொள்ளுங்கள், நாம் ஒன்றாக வலுவாக இருக்கிறோம், ஒன்றாக இருந்தால் மட்டுமே இந்த காயங்களை சரிசெய்து பாதுகாப்பான, அதிக இரக்கமுள்ள உலகத்திற்கு வழி வகுக்க முடியும். பல பெண்களுக்கு அவர்களின் குடும்பத்தின் ஆதரவு கூட இல்லை என்பதை புரிந்து கொள்வோம். அவர்கள் கண்களில் நட்சத்திரங்களுடன் சிறிய நகரங்களிலிருந்து வருகிறார்கள், பிரகாசமாக பிரகாசிக்க வேண்டும் என்று நம்புகிறார்கள், ஆனால் பெரும்பாலும் அவர்களின் கனவுகள் மொட்டுகளில் நசுக்கப்படுகின்றன. இது அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சுரண்டல் இத்துடன் நிறுத்தப்படட்டும். பெண்களே, வெளியே வந்து பேசுங்கள். நினைவில் கொள்ளுங்கள், வாழ்க்கையில் உங்களுக்கு எப்போதும் ஒரு தேர்வு இருக்கும். நோ என்றால் கண்டிப்பாக நோ தான் மறக்க வேண்டாம். உங்கள் கண்ணியம் மற்றும் மரியாதையை ஒருபோதும் சரிசெய்யவோ அல்லது சமரசம் செய்யவோ வேண்டாம்.இதை அனுபவித்த அனைத்து பெண்களுடனும் எப்போது, ஒரு தாயாகவும் பெண்ணாகவும் நான் நிற்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.