வாழையை சொல்லி கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம்: டாக்டர் கிருஷ்ணசாமி

வாழை திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், வாழையை சொல்லி கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம் என கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான வாழை திரைப்படம் நெல்லை மாவட்டத்தில் வாழைத் தார் சுமந்து செல்லும் கூலித் தொழிலாளர்கள் குறித்த திரைப்படம் பேசுகிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்திரைப்படத்திற்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக கிருஷ்ணசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

ஒரு படைப்பாளி என்பவர் தனது வலிகளைப் பதிவு செய்வது வேறு, அதை அவனுடைய சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்வது என்பது வேறு. தனது வலிகளை தன்னுடைய சமூகத்தின் வலிகளாகப் பதிவு செய்யும் போது அல்லது வலிந்து தனது வலியை இந்த சமூகத்தில் விதைக்கின்ற போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

இம்மண்ணின் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களை படம் போட்டுக் காட்டி யாருடைய அனுதாபங்களையும், அதன் மூலம் வசதிகளையும் தேட முயலக் கூடாது. வாழையைப் பற்றிப் பேசும் பொழுது மாபெரும் ஒரு சமுதாயத்தை கோழையாக்குகின்ற வகையில் எவரின் எழுத்துக்களோ, பேச்சுக்களோ, நடிப்புக்களோ, சினிமாக்களோ அறவே கூடாது. தென் தமிழகத்தின் முக்கிய ஒரு கிராமத்திலிருந்து, தென் தமிழக தேவேந்திர குல வேளாளர்களின் முக்கியமான போராட்ட காலத்தில் வாழ்ந்து, தற்போது திரைத் துறையில் பேசப்படக்கூடிய, போற்றப்படக்கூடிய இயக்குனராக ஒருவர் வளர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. அதற்காகப் பாராட்டுகிறோம்.

தனது இழந்த அடையாளத்தை, அதிகாரத்தை மீட்கப் போராடும் ஒரு சமுதாயத்தை பெருமைப்படுத்த முயற்சி செய்ய முடியாமல் வேண்டுமானால் போய் இருக்கலாம். ஆனால், அவர்களை இன்னும் கூலிக்காரர்களாக சித்தரித்துச் சிறுமைப்படுத்துவதும், அம்மக்களின் போராட்ட உணர்வுகளையும் குணங்களையும் மழுங்கடித்து யார் யாருடைய அரசியல் லாபங்களுக்காகவோ புதிய களம் அமைத்துக் கொடுக்கக்கூடிய விதமும் எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. படத்தை பாராட்ட நினைக்கிறேன், பாராட்ட முடியவில்லை. திட்ட நினைக்கிறேன், ஆனால் திட்டவும் முடியவில்லை.

தன்னைக் காட்டிலும் தனது குடும்பம் பெரிது, தனது குடும்பத்தைக் காட்டிலும் இந்த சமுதாயமும் மண்ணும் மக்களும் பெரிது என்ற அடிப்படையில் வாழ்ந்து, என்றோ வீழ்ந்து, இன்று மீண்டும் வீறுகொண்டு எழுந்திருக்கக் கூடிய மாபெரும் சமுதாயத்தை வாழை திரைப்படம் என்ற பெயரை சொல்லி கூலிகளாக, கோழைகளாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.