புதிய கல்விக் கொள்கையை ஏதிர்ப்பது தமிழக அரசின் நோக்கமல்ல: அப்பாவு

“புதிய கல்விக் கொள்கையை ஏதிர்ப்பது தமிழக அரசின் நோக்கமல்ல, 5-ம் வகுப்பில் தோற்றால் குலத்தொழிலுக்கு செல்ல வேண்டும் என்பதையே முதல்வர் எதிர்க்கிறார்” என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு கூறியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு, 12 வகையான குழுக்கள் அமைக்கப்பட்டது. அக்குழுக்கள் சார்பில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றான, ‘சட்டப்பேரவை நாயகர் கலைஞர்’ குழு சார்பில், கருணநிதி நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு, பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான பேச்சுப் போட்டி, கருத்தரங்கம் சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளியில் இன்று (ஆக.29) நடைபெற்றது.நிகழ்வுக்கு, விழாக் குழுவின் தலைவர், பேரவைத் தலைவர் மு.அப்பாவு தலைமையேற்றார். இந்த விழாவில் அப்பாவு பேசியதாவது:-

நாட்டிலேயே தமிழகம் தான் கல்வியில் முதலிடத்தில் உள்ளது. இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டில், ஒதுக்கப்பட்ட மொத்த நிதியான ரூ.4,42,292 கோடியில், கல்விக்கு மட்டும் ரூ.44,000 கோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். நாம் இந்த அளவுக்கு நிதியை கல்விக்காக ஒதுக்கி வருகிறோம். ஆனால், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைகையை கொண்டுவந்து அதில் கையெழுத்திட்டால் தான் நிதியைத் தருவோம் என்று சொல்வது நியாயமா? புதிய கல்வி கொள்கையை எதிர்ப்பது தமிழக அரசின் நோக்கம் கிடையாது. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தந்தை செய்த குலத்தொழிலுக்கு சென்றுவிட வேண்டும் என்ற மறைந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை கொண்டு வருவதைத்தான் முதல்வர் ஸ்டாலின் எதிர்த்து வருகிறார்.

மத்திய அரசு 50 சதவீதம் ஜிஎஸ்டி-யைப் பெற்றுக் கொண்டு மாநில அரசுகளுக்கு 21 சதவீதத்தை மட்டுமே பகிர்ந்து அளிக்கிறது. இருப்பினும், அனைத்து மாநிலங்களுக்கும் நிதி சீராக தரப்படுவதில்லை. தமிழகம் போன்ற மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன. எனவே, புதிய நிதி பகிர்வு முறையை மத்திய அரசு உருவாக்க வேண்டும். 20 சதவீத ஜிஎஸ்டியை மத்திய அரசு வைத்துக் கொண்டு மீதமுள்ள 80 சதவீதத்தை அந்தந்த மாநிலங்களுக்கே வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.