பாஜகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார் சம்பாய் சோரன்!

ஜார்கண்ட் மாநிலத்தில் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் பாஜகவில் இணைந்துள்ளார்.

இந்தாண்டு இறுதியில் ஜார்க்கண்ட்டில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே அங்கே இப்போது மிகப் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த பிப். மாதம் அதாவது ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் சம்பாய் சோரன் முதல்வராகப் பதவியேற்றார். 5 மாதங்கள் அவர் முதல்வராக இருந்தார். கடந்த ஜூன் மாதம் ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், அவர் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றார். இதற்காகச் சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டியிருந்தது. அப்போது நடந்த சில சம்பவங்கள் தன்னை காயப்படுத்தியதாகச் சம்பாய் சோரன் சமீபத்தில் கூறியிருந்தார்.. இருப்பினும், அப்போது அவர் பாஜகவில் இணைவது குறித்து எதுவும் சொல்லவில்லை.

ஜேஎம்எம் கட்சித் தலைமை தன்னை அவமானப்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டிய சம்பாய் சோரன், தனக்கு 3 ஆப்ஷன்கள் இருப்பதாக தெரிவித்தார். அரசியலில் இருந்து விலகுவது, புதிய கட்சி தொடங்குவது அல்லது வேறு கட்சியில் சேருவது ஆகிய 3 வழிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார். இதற்கிடையே ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஆளும் ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவருமான சம்பாய் சோரன் இப்போது பாஜகவில் இணைந்துள்ளார். ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பாஜக பொதுக்கூட்டம் நடந்தநிலையில், அதில் தான் சம்பாய் சோரன் பாஜகவில் அதிகாரப்பூர்வமாக அணைந்தார்.

முன்னதாக 67 வயதான சாம்பாய் சோரன் கடந்த திங்கள்கிழமை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்திருந்தார். அதைத் தொடர்ந்து ஜேஎம்எம் கட்சியின் துணைத் தலைவர் பதவியையும் அமைச்சர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.