மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த மனு குறித்து ராபர்ட் புரூஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியை இந்த முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியிருந்தது திமுக தலைமை. காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் போட்டியிட்டார். பாஜக சார்பில் திருநெல்வேலி எம்எல்ஏவான நயினார் நாகேந்திரன், அதிமுக சார்பில் ஜான்சி ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் சத்யா ஆகியோர் களத்தில் இறங்கி போட்டியிட்டனர். இதில், நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. நயினார் நாகேந்திரன் உள்ளூர்காரர், திருநெல்வேலி எம்.எல்.ஏ., மக்களிடம் சாதாரணமாக பழகும் தன்மை கொண்டவர், தனிப்பட்ட செல்வாக்கு, பாஜகவின் சமீபத்திய வளர்ச்சி உள்ளிட்டவையும் நயினார் நாகேந்திரனுக்கு சாதகமாக இருந்தன. நயினார் வெற்றி பெற்றால் திருநெல்வேலியில் முதல்முறையாக தாமரை மலரும் வாய்ப்பு இருந்தது.
கன்னியமாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ராபர்ட்புரூஸ், வழக்கறிஞர். திருநெல்வேலி, கன்னியாகுமாரி மாவட்டங்களில் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்சிப் பதவிகளில் இருந்தார். 2015 ம் ஆண்டு முதல் கன்னியாகுமாரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவராகவும் பொறுப்பு வகித்தார். நெல்லையில் பெரும்பான்மையாக வசிக்கும் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் ராபர்ட் புரூஸுக்கு திருநெல்வேலி தொகுதி வேட்பாளருக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கையின்போது தொடக்கத்தில் நயினார் நாகேந்திரன் லீடிங்கில் இருந்தார். கடைசியில் பெரும் ட்விஸ்டாக காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் முன்னிலை வகிக்கத் தொடங்கினார். பின்னர், அவரை நயினாரால் முந்த முடியவில்லை. இறுதியில் திருநெல்வேலி தொகுதியில் ராபர்ட் புரூஸ் 1 லட்சத்து 65 ஆயிரத்து 620 வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். பாஜகவின் நயினார் நாகேந்திரன் 3 லட்சத்து 36 ஆயிரத்து 676 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி 89 ஆயிரத்து 601 ஓட்டுகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார். நாம் தமிழர் கட்சியின் சத்யா 87 ஆயிரத்து 686 மதிப்பெண்கள் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்தார். இதைத்தொடர்ந்து, திருநெல்வேலி எம்பியாக ராபர்ட் புரூஸ் தேர்வு செய்யப்பட்டார்.
திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன், திமுக கூட்டணி சார்பில் எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸிடம் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்விடையந்தார். இதைத்தொடர்ந்து, ராபர்ட் ப்ரூஸ் வெற்றி பெற்றதை ரத்து செய்யக் கோரி நயினார் நாகேந்திரன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ராபர்ட் ப்ரூஸ் தனது பிரமாண பத்திரத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் உள்ள சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் சார்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தன் மீதான குற்றவியல் வழக்குகளையும் ராபர்ட் ப்ரூஸ் மறைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, மனு குறித்து ராபர்ட் ப்ரூஸ் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.