“தமிழக அரசு கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பொறுப்பான மூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல,” என்று பாமக நிறுவனர் ராமதாஸுக்கு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பாமக நிறுவனர் ராமதாஸ், இன்று (ஆக.30) வெளியிட்டுள்ள அறிக்கையில், பொங்கல் 2025 திருநாளையொட்டி, தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி சேலை முழுவதையும் விசைத்தறி நெசவாளர்களிடமிருந்து வாங்கயிருப்பதாகவும், இதனால் கைத்தறி நெசவாளர்கள் பெருமளவில் வேலையிழப்பர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மொத்தமுள்ள 1114 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில், 114 சங்கங்களை சார்ந்த 12,831 கைத்தறி நெசவாளர்கள் மட்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். எஞ்சிய கைத்தறி நெசவாளர்கள் கோ-ஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தைக்கான ரகங்களின் உற்பத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
2023-24-ம் ஆண்டில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களால் ரூபாய் 1,241 கோடி மதிப்பிலான ஜவுளிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதில் 14 விழுக்காடு அளவுக்கு மட்டுமே அரசு திட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது, ரூபாய் 1,059 கோடி மதிப்பிலான, அதாவது 86 விழுக்காடு ஜவுளிகள் கோஆப்டெக்ஸ் மற்றும் வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது தவிர, முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது வருவாய் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் வேட்டி மற்றும் சேலைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு முதியோர் ஓய்வூதியம் திட்ட பயனாளிகளுக்கு 49.15 லட்சம் சேலைகளும் 18.31 லட்சம் வேட்டிகளும் கோ-ஆப்டெக்ஸ் வாயிலாக விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு முழுவதுமாக உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து வருவாய் துறைக்கு வழங்கப்பட்டது.
கைத்தறித் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் வேட்டி சேலை வழங்கும் திட்டம், பொங்கல் 2024-ன் கீழ் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை சார்ந்த 12,831 கைத்தறி நெசவாளர்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டு 46.43 லட்சம் சேலைகளும் 20.86 லட்சம் வேட்டிகளும் நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்து வருவாய் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
எனவே, ராமதாஸின் அறிக்கையில் கடந்த ஆண்டு 73 லட்சம் வேட்டிகள், 50 லட்சம் சேலைகள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உண்மைக்கு புறம்பானதாகும். மேலும், நடப்பாண்டில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு, முதியோர் ஓய்வூதியம் திட்டத்துக்கென கைத்தறி நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பு வழங்கி இவர்களால் உற்பத்தி செய்யப்படும் சேலைகள் மற்றும் வேட்டிகள் அனைத்தும் கோ-ஆப்டெக்ஸ் வாயிலாக கொள்முதல் செய்து வழங்க அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்படும் உற்பத்தி திட்டத்தின் எண்ணிக்கையிலோ அல்லது நெசவாளர்களுக்கு வழங்கப்படும் நெசவுக்கூலியிலோ எவ்வித குறைவும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே பாமக நிறுவனர் ராமதாஸ், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு, வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், கைத்தறி நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கு மாற்றாக ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதால் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
மேலும் கைத்தறி நெசவாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ள நெசவாளர்களுக்கு நடப்பாண்டில் அவர்கள் பெற்று வரும் கூலிக்கான அகவிலைப்படியில் 10 விழுக்காடு உயர்வு, இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் இரு மாதங்களுக்கு ஒருமுறை 300 அலகுகள் இலவச மின்சாரம், 60 வயது நிறைவடைந்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம், காலஞ்சென்ற நெசவாளர்களின் குடும்பத்துக்கு குடும்ப ஓய்வூதியம், கைத்தறி ஆதரவுத் திட்டத்தின் கீழ் 90 விழுக்காடு அரசு மானியத்தில் தறிகள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகிறது.
குழும வளர்ச்சி திட்டத்தின் கீழ் தறிகள், தறி உபகரணங்கள், தறிக் கூடங்கள் மற்றும் நெசவுப் பயிற்சி உள்ளிட்ட நலத்திட்டங்கள், நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு 20 விழுக்காடு மானியத்துடன் கூடிய கடன் வழங்குதல், ஆண்டுதோறும் நெசவாளர்களுக்கான சிறப்பு மருத்துவ இலவச முகாம்கள் நடத்துதல் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு ரூபாய் 4 லட்சம் மானியத்தில் வீடுகட்டும் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக முதல்வரின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றது முதல், கைத்தறி நெசவாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் அதிகபட்ச அக்கறை செலுத்தி பல்வேறு நலத்திட்டங்களை செவ்வனே நிறைவேற்றி வருகிறது. எனவே அடிப்படை ஆதாரமற்ற உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுவது பொறுப்பான மூத்த அரசியல் தலைவருக்கு அழகல்ல. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.