பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும்: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கை 2020-இன் கீழ் உள்ள ’பி.எம். ஸ்ரீ’ திட்டத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:-

தமிழக பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் யோசனையை தேசிய கல்விக் கொள்கை – 2020 முழுமையாக ஆதரிக்கிறது. பன்மொழி மற்றும் தாய்மொழியில் கற்பதை ஊக்குவிக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. உலகின் பழமையான மொழிகளில் ஒன்றாகவும், இந்தியாவின் பழமையான மொழியாகவும் தமிழ் உள்ளது என்பது பெருமைக்குரியது. தமிழ் மொழியைக் கற்க ஒரு பிரத்யேக சேனல் கடந்த ஜூலை 29, 2024-ல் தொடங்கப்பட்டது.

2023-24 நிதியாண்டில் சமக்ரசிக்ஷா திட்டத்தில் தமிழத்திற்கு 4 தவணைகளாக ரூ. 1,876.15 கோடி ஒதுக்கப்பட்டது. 2024-25 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ. 4305.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உறுதியளித்தபடி, பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழகம் கையெழுத்திட வேண்டும். 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் போல தமிழகமும் கையெழுத்திட வேண்டும். இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.