ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும்!

ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்றி அறிவித்துள்ளது இந்திய தலைமை தேர்தல் ஆணையம். ஹரியானாவில் அக்டோபர் 1க்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஹரியானாவில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஹரியானா மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவை. 2019 ஆம் ஆண்டு ஹரியானா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் பாஜக – ஜேஜேபி கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. பாஜக அரசுக்கான ஆதரவை கடந்த மார்ச் மாதம் ஜேஜேபி வாபஸ் பெற்றது. இந்நிலையில், ஹரியானா மாநில சட்டசபைக்கு அக்டோபர் 1ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த ஆகஸ்ட் 16-ம் தேதி தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபர் 4ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும், செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஹரியானாவில் தேர்தல் நடக்கவுள்ள நாட்களில் தொடர் விடுமுறை வருவதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார். அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பு செப்டம்பர் 28 (சனிக்கிழமை) மற்றும் 29 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை. தேர்தல் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, அக்டோபர் 3 அக்ரசென் ஜெயந்தி ஆகும். இவ்வாறு தொடர் விடுமுறை என்பதால், வாக்குப்பதிவு சதவீதம் குறைய வாய்ப்புள்ளது. எனவே, தேர்தலை வேறொரு நாளுக்கு நடத்த வேண்டும் என்று மோகன் லால் பரோலி தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தினார்.

ஹரியானாவில் ஆளும் பா.ஜ.கவுக்கு தேர்தலில் தோல்வி அடைவோம் என்ற பயம் வந்துவிட்டது. இதனால் தான் பொய் குற்றச்சாட்டுகளை கூறி தேர்தல் தேதி மாற்ற பாஜக கோரிக்கை விடுத்துள்ளது என ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். பிஷ்னோய் சமூக மக்கள் கொண்டாடும் 100 ஆண்டுகள் பாரம்பரிய திருவிழாவின் காரணமாக அந்தச் சமூக மக்களும் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் பிஷ்னோய் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை மாற்றி உள்ளது. ஹரியானாவில் அக்டோபர் 1 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், ஹரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் அக்டோபர் 4 ஆம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.