“இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை. இந்த கார் ரேசினால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை” என பாஜகவைச் சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று (ஆக.31) தொடங்கியது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி ரயில் சேவையை தொடங்கி வைத்தார். இந்நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் தாம்பரம் எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியம் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இதில் கலந்து கொண்டனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் திரையில் வந்தபோது திமுகவினர் மற்றும் பாஜவினர் மாறி மாறி கோஷங்கள் எழுப்பி ரயிலை வரவேற்றனர். அப்போது பாஜவினர் மோடி வாழ்க என கோஷங்கள் எழுப்பினர். இதற்கு திமுகவினர் மோடி ஒழிக என கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் டி.ஆர்.பாலு கொடியசைக்க ரயில் புறப்பட்டு சென்றது. வந்தே பாரத் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வந்த பாஜகவை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:-
திமுகவினருக்கு நாகரிகம் தெரியாததால் தான் மோடி ஒழிக என கோஷம் எழுப்பினார்கள். தமிழகத்துக்கு மோடி பல்வேறு விஷயங்களை செய்து உள்ளார். மருத்துவமனை, டிபன்ஸ் காரிடார், விமான நிலையம், திருச்சி விமான நிலையம் மேம்பாடு, வெள்ள நிவாரணம் என என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் செய்து வருகிறார். தமிழகத்துக்கு இரண்டு வந்தே பாரத் ரயில் கொடுத்துள்ளார். இவ்வாறு இருக்கும் போது திமுகவினர் மோடி ஒழிக என கோஷமிட்டு உள்ளனர். அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். பதிலுக்கு பாஜகவினரும் ஸ்டாலின் ஒழிக என கோஷம் இட எவ்வளவு நேரம் ஆகும். பாஜகவினர் இதுபோன்ற அரசு நிகழ்ச்சிகளில் அரசியல் செய்வது இல்லை. நிகழ்ச்சிக்கு வந்திருந்த டி.ஆர்.பாலு இதுபோல கோஷமிடுங்கள் என தெரிவித்திருப்பார் என்று நினைக்கின்றேன். அவர்களது கலாச்சாரம் அது, வேறு ஒன்றும் இல்லை.
சென்னையில் நடப்பது கார் ரேஸ் இல்லை போட் ரேஸ் என கூறுகிறார்கள். சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்பதாக கேள்விப்பட்டேன். கார் ரேஸ் நடக்கும் இடத்தை சுற்றி தகடு அமைத்து மறைத்து உள்ளார்கள். அப்படி ரகசியமாக ஏன் கார் ரேஸ் நடத்துகிறார்கள் என தெரியவில்லை. ஒருவேளை அது தான் திராவிட மாடலா எனவும் தெரியவில்லை. ரோட்டில் நடக்கும் ரேஸுக்கு எதற்கு டிக்கெட், எதற்கு காசு. முதலில் கார் ரேஸ் நடத்துவதே தவறு. அதை நாங்கள் எதிர்க்கின்றோம். அதையும் மீறி நடத்துகிறீர்கள்.
அவ்வாறு நடத்தும் ரேஸை அனைவரும் இலவசமாக பார்க்கட்டுமே எதற்காக ஆயிரம், 3 ஆயிரம், 10 ஆயிரம் என டிக்கெட் விற்பனை செய்கிறீர்கள். இந்த கார் ரேஸுக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் நுழைவாயிலை முழுமையாக அடைத்து உள்ளனர். மருத்துவமனைக்கு செல்பவர்கள் எப்படி செல்வார்கள் என தெரியவில்லை அதற்கு வேறு ஏதாவது வழி உள்ளதா எனவும் தெரியவில்லை. அவ்வாறு வழி இருந்தால் அதனை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இந்த ரேஸ் தேவை இல்லாத ஒன்று, அதிலும் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என இருவரும் ரேஸ் கார் ஓட்டுவது போல் உடை அணிந்து நிற்பது போல் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது நகைச்சுவையாக உள்ளது. இந்த கார் ரேசினால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பயனும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.