மேகேதாட்டு அணை: மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம்!

மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.குணசேகரன், பொதுச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாட்டுடன் பேசி அனுமதி பெற்று தர வேண்டும் என்று கர்நாடக அரசு மத்திய அரசை வலியுறுத்தி கடிதங்கள் அனுப்பி வந்தன. இந்நிலையில் மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம், மேகேதாட்டு அணை அனுமதி குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு முடிவு எடுக்கும் என்று ஆணையத்திடம் இதை தாக்கல் செய்திட கர்நாடகஅரசுக்கு அறிவுறுத்தி உள்ளது. இது கண்டனத்துக்குரியது.

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு அதன் பின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, அதன் மீது காவிரி பயன்பாட்டு மாநிலங்கள் மறு ஆய்வு மனுக்களை தாக்கல் செய்து அந்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் எக்காரணம் கொண்டும் காவிரி ஆணையம் மற்றும் ஒழுங்காற்று குழுக் கூட்டங்களில் மேகேதாட்டு அணை கட்டுமானம் குறித்தான எந்த ஒரு விவாதப் பொருளும் விவாதம் செய்யக் கூடாது. அதற்கான முறையில் தமிழக அரசு உடனடியாக மத்திய அரசுக்கு தன் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.