பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இல்லாமல் தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் தலைவரான அண்ணாமலைக்கும் அதிமுகவிற்கும் ஏழாம் பொருத்தமே நிலவி வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை அண்ணாமலை கடந்த வாரம் பொது மேடையில் வைத்தே விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அத்துடன், பல்வேறு இடங்களில் அண்ணாமலை மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல் தொடர்பான மேற்படிப்புக்காக அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு லண்டன் சென்றார். அவர் வரும் வரை கட்சிப் பணிகளை கவனிக்க எச்.ராஜாவை ஒருங்கிணைப்பாளராக கொண்டு குழு ஒன்றை டெல்லி பாஜக அமைத்துள்ளது.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-
அண்ணாமலையை எப்படி அனுப்புவது என பாஜக தலைமை தவித்துக்கொண்டு இருந்திருக்கும் போல. அண்ணாமலை லண்டன் சென்ற பிறகு தமிழ்நாடு சற்று அமைதியாக இருப்பது போல தெரிகிறது. தற்போது ஒருங்கிணைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள எச்.ராஜா நீண்ட நெடிய அரசியல் அனுபவம் வாய்ந்தவர். அரசியல் பண்பாடு, நாகரீகத்தை முழுமையாக உள்வாங்கியவர். இதன்மூலம் பாஜக தொண்டர்களுக்கு சுதந்திரம் கிடைத்திருக்கும் என்று சொல்கிறார்கள்.
தமிழ்நாட்டில் நிறைய பிரச்னைகள் உள்ளது. கல்விக்குக் கூட நிதி வாங்க முடியாத கையாளாகாத அரசு உள்ளது. முதல்வர் இதுதொடர்பாக கடிதம் எழுதியும், மத்திய அரசு நிதி தருவதாகத் தெரியவில்லை. கல்வி நிதி, மெட்ரோ ரயில் நிதி, வெள்ள நிவாரண நிதி, ரயில்வே திட்டங்களுக்கான நிதியை கொடுக்க மத்திய அரசுக்கு மனமில்லை, தமிழக அரசுக்கு கேட்கத் தகுதியில்லை. மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது எக்காரணத்தைக் கொண்டும் தடை படக்கூடாது. உடனடியாக மத்திய அரசு அந்த நிதியை விடுவிக்க வேண்டும். புதிதாக வந்துள்ள எச்.ராஜா அதனை தமிழகத்திற்கு பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை உள்ளது.
திரைப்படத்தில் காட்டுவது போல உதயநிதி ஸ்டாலின் வளர்ச்சி 3 ஆண்டுகளில் மிகப் பெரிய வளர்ச்சியாக மாறியுள்ளது. அரசியலுக்கு வந்தார், சட்டமன்ற உறுப்பினர் ஆனார், அமைச்சரானார், முதல்வர் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதால் அறிவிக்கப்படாத முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். 3 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய வளர்ச்சி தமிழகத்தில் மட்டுமல்ல இந்திய அளவில் யாருக்கும் சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.