பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்: சீமான்

தனித் தமிழ்நாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்திய பொன்பரப்பி தமிழரசனுக்கு கோவிலே கட்டுவோம்.. அந்த காலமும் வரும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

1980களின் மத்தியில் இந்தியாவில் இருந்து தமிழ்நாடு தனியாக பிரிந்து தனிநாடாக வேண்டும் என்ற கோட்பாட்டுடன் தமிழ்நாடு விடுதலைப் படை என்ற இயக்கம் மூலம் ஆயுதப் போராட்டம் நடத்தியவர் பொன்பரப்பி தமிழரசன். பொன்பரப்பி வங்கி முன்பாக போலீசார் நடத்திய தாக்குதலில் தமிழரசன் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். பொன்பரப்பி தமிழரசன் தொடர்பாக பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியன் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

தமிழரசனுக்கு நாங்கள் நினைவிடம் என்ன கோவிலே கட்டும் காலம் வரும்.. இங்கே இருப்பவர்கள் அனைவரும் சிந்தித்தால் சாத்தியமாகும். எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காவதன் கம்யூனிஸ்ட்டே இல்லை என்கிற சாருமஜூம்தாரின் கோட்பாட்டை ஏற்றவர் தமிழரசன். நாமும் சொல்வோம்.. எதிரியின் ரத்தத்தில் கை நனைக்காதவன் தமிழனே இல்லை என்போம். தமிழரசன் தனி மனிதன் அல்ல.. அவரே ஒரு பேரியக்கமாக இருந்தவர். மாவோ சொன்னதைப் போல மக்களோடு சென்று மக்களோடு இணைந்து வாழ்ந்தவர் தமிழரசன். இந்தியமும் திராவிடமும் தமிழ் தேசிய அரசியலுக்கு நேர் எதிரானவை. மானத் தமிழருக்கு மரணத்தை விட மானம்தான் பெரிது என மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை தொடங்கி பெரியவர் கலியபெருமாள் வரை வாழ்ந்தனர். கலியபெருமாள், தமிழரசன், வீரப்பன், பிரபாகரன் என்கிற வரிசை.. அதாவது தமிழரின் வீரம் தலை தூக்கும் போது பயங்கரவாதம், தீவிரவாதம் என பழிசுமத்துகிற போக்குதான் இருந்துள்ளது. ஏனெனில் தமிழர்கள் எழுச்சி பெற்றால் இந்தியமும் திராவிடமும் செல்லாக்காசாகிவிடும் என்கிற அச்சம்தான்.

வீரப்பனை திருடன் என்றால் ஜெயலலிதா, கருணாநிதி யார் என்கிற கேள்வியை கேட்கிறோம். பதில் இல்லையே. 1983 இலங்கையில் நடைபெற்ற ஜூலை கலவரம்தான் தமிழ்த் தேசிய அரசியலுக்குள் தமிழரசை கொண்டு வந்தது. தமிழ்நாடு விடுதலைப் படைக்கு காரணமே புலவர் கலியபெருமாள். அவர் இல்லை எனில் தமிழரசன் இல்லை. நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. இந்திய நாடே எங்களுடையது. பாரத நாடே பைந்தமிழர் நாடு. இந்தியா முழுவதுமே தமிழை தாய்மொழியாகக் கொண்ட நாகர்கள் வாழ்ந்த நிலம் என்கிறார் அம்பேத்கர். தெற்காசியா முழுவதும் பரவி வாழ்ந்த தமிழர்கள். இந்த நாடு- இந்தியா என்னுடைய நாடு. எங்களை எப்போதும் பிரிவினைவாதிகள் என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அது ஒருவகையில் பெருமிதம்தான். இவ்வாறு சீமான் பேசினார்.