“மேகேதாட்டு அணையால் கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் கிடைக்கும்,” என சென்னையில் திடக்கழிவு மேலாண்மை திட்டங்களை பார்வையிட்ட கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான குழுவினர், சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட நடவடிக்கைளை பார்வையிட இன்று (செப்.3) சென்னை வந்தனர். ஆலந்தூர் மண்டலத்தில் உள்ள உர்பேசர் சுமீத் நிறுவன கண்காணிப்பு அறையில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை அவர்கள் பார்வையிட்டனர். அதன்பின், அண்ணாநகர் மண்டலம், சேத்துப்பட்டில் உள்ள ஈரக்கழிவுகளில் இருந்து இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும் மாதவரத்தில் உள்ள இயற்கை உயிரி எரிவாயு தயாரிக்கும் நிலையத்தையும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வுகளில், கர்நாடக நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் உமாசங்கர், பெங்களூரு மாநகர ஆணையர் துஷார் கிரிநாத், துணை முதல்வரின் செயலர் ராஜேந்திரசோழன், சென்னை மாநகராட்சி கூடுதல் ஆணையாளர் (சுகாதாரம்) வி.ஜெயசந்திர பானுரெட்டி, மத்திய வட்டார துணை ஆணையாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். அதன்பின், ரிப்பன் மாளிகையில் சென்னை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை குறித்த காட்சிப்படம் திரையிடப்பட்டது.
இதனிடையே, செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக துணை முதல்வர் சிவக்குமார் கூறியதாவது:-
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை பார்வையிட 50 அரசு அதிகாரிகள் கொண்ட குழுவினருடன் வந்துள்ளேன். திடக்கழிவுகள் உருவாகும் வழிகள் குறித்தும், அதிலிருந்து இயற்கை எரிவாயு தயாரிப்பு குறித்தும் அறிந்து கொண்டோம். இந்த ஆய்வுப் பணிகளுக்காக கடந்த ஓராண்டுக்கு முன்பே வர திட்டமிட்டிருந்தேன். இப்போதுதான் வர முடிந்தது. என்னுடன் வந்துள்ள அரசு அதிகாரிகள் இந்த பணிகளையும் மற்றும் சென்னை மாநகரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மைப் பணிகளையும் பார்வையிட்டனர். தமிழக அரசின் சிறப்பான பணிகளுக்கு பாராட்டுக்கள்.
இதர மாநிலங்களுக்கும் இந்த திட்டம் முன்னோடியாகும். தமிழக அரசிடமிருந்து நாங்களும் பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டோம். இவற்றை நாங்களும் பின்பற்றி எங்கள் மாநிலத்தில் திடக்கழிவு மற்றும் தூய்மைப் பணிகளை மேம்படுத்துவோம். திடக்கழிவு என்பது தேசிய அளவில் முக்கியமான பிரச்சினை. எனவே, திடக்கழிவுகளை முறையாகக் கையாண்டால் அதிலிருந்து மின்சாரம், இயற்கை எரிவாயு போன்ற பயனுள்ள பொருட்களை தயாரிக்கலாம். திடக்கழிவு மேலாண்மைப் பணிகளுக்கு சென்னை மாநகரம் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையில் சென்னை மாநகரை நாங்களும் பின்பற்றுவோம்,” என்றார்.
தொடர்ந்து, மேகேதாட்டு அணையைக் கட்டுவதற்கு கர்நாடகம் திட்டமிட்டு வருகிறது. அதற்கு தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறதே என செய்தியாளர்கள் கேட்டபோது, “மேகேதாட்டு விவகாரம் தொடர்பாக நான் தற்போது விவாதிக்க விரும்பவில்லை. இரண்டு மாநிலங்களிலும் மழை நன்றாகப் பொழிந்து உதவியிருக்கிறது. மேகேதாட்டுவில் அணை கட்டினால் அது கர்நாடகாவைவிட தமிழகத்துக்கே அதிக பயன் அளிக்கும்,” என்றார்.
இதையடுத்து, இன்று மதியம், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் குறிஞ்சி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்த சிவக்குமார், அங்கிருந்து சிறிது நேரத்தில் புறப்பட்டுச் சென்றார். முதல்வர் ஸ்டாலினை சந்திக்க முடியாத நிலையில், மரியாதை நிமித்தமாக அவர் உதயநிதியை சந்தித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.