அருப்புக்கோட்டையில் சாலை மறியலைத் தடுக்க முயன்ற பெண் டிஎஸ்பியை தாக்கியதாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருமாள்தேவன்பட்டியை சேர்ந்த மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் (33) என்பவரை, திருச்சுழி-ராமேசுவரம் சாலையில் கேத்தநாயக்கன்பட்டி விலக்கு அருகே ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இது தொடர்பாக 6 பேர் மீது திருச்சுழி போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காளிகுமார் உடல் பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அவரதுஉறவினர்கள் ஏராளமானோர் நேற்று காலை அங்கு குவிந்தனர்.
கொலையாளிகள் அனைவரையும் உடனே கைது செய்யக் கோரி, அரசு மருத்துவமனை முன் காளிகுமார் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது சிலர் டிஎஸ்பி காயத்ரியை தள்ளிவிட்டு, அவர் தலைமுடியைப் பிடித்து இழுத்துத் தாக்கினர். இதை தடுக்க முயன்ற போலீஸாருக்கும், மறியல் செய்ய வந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரை கண்டித்து காளிகுமாரின் உறவினர்கள் திருச்சுழி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காளிகுமார் உடலை உறவினர்கள் பெற்றுச்சென்றனர்.
தகவலறிந்து வந்த எஸ்.பி. கண்ணன், டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து விசாரித்தார். தொடர்ந்து, டிஎஸ்பி-யைத் தாக்கியதாக, ராமநாதபுரம் அருகேயுள்ள நெல்லிகுளம் பாலமுருகன் (43) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பொன்குமார், காளிமுத்து, சஞ்சய்குமார், பாலாஜி, ஜெயக்குமார், ஜெயசூர்யா ஆகிய 6 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது, அனுமதியின்றி போராட்டம் நடத்தியது, அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையில், மினி லாரி ஓட்டுநர் காளிகுமார் கொலை வழக்கில் காளீஸ்வரன், அருண்குமார், லட்சுமணன், பாலமுருகன் ஆகியோரை போலீஸார் நேற்று கைதுசெய்தனர்.