ரூ.1.45 லட்சம் கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.
பாதுகாப்பு படைகளுக்கு ரூ.1,44,716 கோடி மதிப்பில் ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் செய்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. ராணுவத்தின் டேங்க் படைப்பிரிவை நவீனமயமாக்க, எதிர்காலத் தேவைக்கான நவீன டேங்குகள் வாங்கப்பட உள்ளன. மேலும் வான் பாதுகாப்பு ரேடார்கள், கவச வாகனங்களும் வாங்கப்படவுள்ளன. இந்திய கடலோர காவல் படைக்கு டோர்னியர் ரக விமானம், விரைவு ரோந்து படகுகள் வாங்கப்படவுள்ளன.
சுகோய் போர் விமானங்களுக்கு ரூ.26,000 கோடி மதிப்பில் 240 புதிய இன்ஜின்களை வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல்அளித்தது. இந்திய விமானப்படையில் தற்போது 259 சுகோய் போர் விமானங்கள் உள்ளன. இவை ரஷ்ய தயாரிப்பு விமானங்கள். போர் விமானங்களில் பொதுவாக அதன் வாழ்நாளில் 3 முறை இன்ஜின்கள் மாற்றப்படும். இதனால் சுகோய் போர் விமானங்களுக்கு 240 புதிய ஏரோ இன்ஜின்களை ரூ.26,000 கோடிக்கு வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த இன்ஜின்களின் சில பாகங்கள் ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பாதுகாப்பு துறையின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தில் (எச்ஏஎல்) தயாரிக்கப்படவுள்ளன. இங்கு தயாரிக்கப்படும் இன்ஜின்களில் 54 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பு பாகங்கள் இடம்பெறும். இந்த இன்ஜின்கள் எச்ஏஎல் நிறுவனத்தின் கோராபுட் பிரிவில் தயாரிக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானப்படையில் கடந்த சில ஆண்டுகளாக விபத்துக்குள்ளான சுகோய் போர் விமானங்களுக்கு மாற்றாக 12 புதிய சுகோய் போர்விமானங்களை ரூ.11,500 கோடிமதிப்பில் வாங்கவும் ஆர்டர்கொடுக்கப்பட்டுள்ளது.
விமானப்படையில் சுகோய்விமானப் படைப்பிரிவுகள் முக்கியமானவைாக உள்ளன. இவற்றுக்கு புதிய இன்ஜின்கள் பொருத்துவதன் மூலம், நாட்டின் பாதுகாப்பு தயார் நிலை வலுவடையும்.விமானப்படையில் 60 மிக்-29 ரக விமானங்களுக்கும் புதிய இன்ஜின்களை ரூ.5,300 கோடி மதிப்பில் வாங்குவதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் கடந்த பிப்ரவரியில் ஒப்புதல் வழங்கியது. இந்த இன்ஜின்களை ரஷ்யா ஒத்துழைப்புடன் எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.