நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு- இதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் நாட்டில் தற்போதும் இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு விடுதலை அடைந்த பின்னர் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் கோரிக்கை. பீகார் போன்ற சில மாநிலங்கள் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டை அமல்படுத்தின. ஆனால் இந்த இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் தடை செய்தது. இதனால் மத்திய அரசுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இதனைத்தான் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இடைவிடாமல் வலியுறுத்தி வருகிறார்.
இதனடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் பிரசாத் நாயுடு என்பவர் பொதுநலன் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை மத்திய அரசானது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. கொரோனா பாதிப்பால் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரியான விவரங்களும் சேர்க்கப்படும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
பிரசாத் நாயுடுவின் இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹரிஷிகேஷ் ராய், எஸ்விஎன் பாட்டீ ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அப்போது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என கூறி பிரசாத் நாயுடுவின் பொதுநலன் மனுவை டிஸ்மிஸ் செய்தது. இதன் மூலம் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோரும் கோரிக்கையை மத்திய அரசு பக்கமே திருப்பிவிட்டிருக்கிறது நீதிமன்றம்.