முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. காவிரியில் நீர் எடுக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மிக அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டாரை பயன்படுத்த அவருக்குச் சாதகமாக பிறப்பிக்கப்பட்ட அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள், அதிக குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி 2020 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள் உள்பட 31 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலம் மாவட்டம், நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம் என்ற சங்கம் துவங்கப்பட்டது. மேட்டூர் இடதுகரை பாசன கால்வாய் ஆயக்கட்டுதாரர்களான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 18 பேர் சங்கத்தில் சேர்க்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, கூடுதல் குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த அனுமதி வழங்கி கடந்த 2020 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி சேலம், வெள்ளாளபாளையத்தைச் சேர்ந்த செல்வம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தில் சேர்க்கப்பட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது சகோதரர்கள், 5 குதிரைத் திறன் கொண்ட மின் மோட்டார்களை பயன்படுத்த மட்டுமே முடியும் என்ற நிலையில், 27 குதிரைத் திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்த சட்டவிரோதமாக அனுமதி வழங்கப்பட்டது எனவும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயல் அதிகார துஷ்பிரயோகம் செயல் என்றும், நடத்தை விதிகளை மீறிய முறைகேடு என்றும் மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தகுதியுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், அவர்களின் பெயர்களை நீக்கி, புதிதாக தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் பெயரில் எடப்பாடி பழனிசாமி இணைப்பு வாங்கியுள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
மேலும், எவ்வளவு தண்ணீர் காவிரியில் இருந்து எடுக்கப்படுகிறது என்பதை அளவிட எந்த மீட்டரும் இல்லாமல், தொடர்ச்சியாக தண்ணீர் எடுக்கப்பட்டுப்பட்டதாகவும், இது சம்பந்தமாக 2023 ஆம் ஆண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கத்தினர் காவிரியில் இருந்து தண்ணீர் எடுப்பதை மீட்டர் பொருத்தி, கண்காணித்து முறைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஊழல் தடுப்புத்துறை வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் செல்வம் தமது மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு, தமிழக அரசு, எடப்பாடி பழனிசாமி, அவரது சகோதரர்கள் உள்பட 31 பேர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளது.