உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்: பிரதமர் மோடி!

உலகளாவிய தண்ணீர் பிரச்னைக்குத் தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

தண்ணீர் சேகரிப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-

சமஸ்கிருத பழமொழியை சுட்டிக்காட்டினார். உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் நீரில் இருந்தே தோன்றியது. அதனால், அதனைச் சார்ந்தே அனைத்து உயிர்களும் உள்ளன. அதனால்தான் தண்ணீர் தானமும், மற்றவர்களுக்காக தண்ணீர் சேகரிப்பதும் மிகப்பெரிய தானமாகப் பார்க்கப்படுகிறது. இதனை ரஹித் தாஸும் கூறுகிறார். இந்தியாவின் சிந்தனை மற்றும் செயல்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டது. மிகவும் விரிவானது. உலகம் சந்தித்துவரும் தண்ணீர் பிரச்னைகளுக்கு தீர்வு காண இந்தியா துணை நிற்க வேண்டும்.

குஜராத் மண்ணிலிருந்து நீர்வளத் துறை சார்பில் இன்று முக்கியமான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்தசில நாள்களாக நாட்டின் பல்வேறு பகுதிகள் கடும் மழையினால் பாதிக்கப்பட்டது. தற்போதும் சில மாநிலங்களில் இந்த நிலை நீடிக்கிறது. தண்ணீரால் சூழப்படாத எந்தப் பகுதியும் இருக்காது. குஜராத்தின் நீண்ட காலமாக முதல்வராக இருந்துள்ளேன். ஆனால் தாழ்வானப் பகுதிகளில் கூட இந்த அளவுக்கான நீரைக் கண்டதில்லை. இந்தமுறை குஜராத் மிகப்பெரிய சவாலை சந்தித்தது. இயற்கை ஏற்படுத்திய இந்த விளைவில் இருந்து மீண்டுவர அனைத்துத் துறைகளும் ஒன்றிணைந்து இயங்கியது. குஜராத் மற்றும் குஜராத் மக்களின் நடத்தையால் சவாலான சூழலிலிருந்து மீண்டு வந்தோம்.

நீர் பாதுகாப்பு என்பது கொள்கை அல்ல, அது வாழ்க்கையின் ஒரு அங்கம். நீரை பாதுகாப்பதில் தாராள மனப்பான்மை மற்றும் பொறுப்பு அவசியம். எதிர்கால தலைமுறையினர் நம்மை பரிசோதித்தால், அவர்களின் முதல் அளவீடு அவர்களுக்காக நாம் சேர்த்துவைக்கும் தண்ணீராகத்தான் இருக்கும். ஏனெனில் இது வளம் சார்ந்தது அல்ல, மாறாக வாழ்க்கை மற்றும் எதிர்காலம் சார்ந்தது. அதனால்தான் நிலையான எதிர்காலத்துக்கான 9 தீர்மானங்களில், தண்ணீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பை முதன்மையாக்கியுள்ளோம். மிகவும் பயனுள்ள திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மோடி பேசினார்.