தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும்; ஶ்ரீவிலிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுகளுக்கு உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தமிழ்நாடு அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் இருந்து விசாரணை நீதிமன்றம் இருவரையும் விடுதலை செய்தது. ஆனால் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ஆய்வு செய்வதாக தெரிவித்தார். இது தொடர்பான வழக்குகள் விசாரணையும் நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்த இந்த வழக்குகளில் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோரை விடுதலை செய்த விசாரணை நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்ததுடன் இருவர் மீதான வழக்குகளையும் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். இதனையடுத்து அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணை வரும் 9-ந் தேதி முதல் ஶ்ரீவில்லிப்புத்தூர் விசாரணை நீதிமன்றத்தில் தொடங்க உள்ளது. இந்த விசாரணை தினமும் நடத்தப்பட வேண்டும் என்பதும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த மறு விசாரணை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிகே மிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் நடத்திய இன்றைய விசாரணையின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரொத்தகி, தங்கம் தென்னரசு மனைவி சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு ஷிங்வி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் ஆஜராகினர்.
இன்றைய விசாரணைக்குப் பின்னர், அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளை மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்; இருவரும் ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற தனிநீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.