அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு: சு.வெங்கடேசன் கண்டனம்!

அசோக்நகர் அரசுப்பள்ளியில் நடந்த ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், “மந்திரம் சொன்னால் பிரபஞ்ச சக்தி இறங்கும்” என்று மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில், நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியையும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகின்றன. அதாவது, மகாவிஷ்ணு என்பவர் இந்த சொற்பொழிவை நடத்தி வருகிறார். தற்போது, 2 அரசு பள்ளிகளில் இதனை நடத்தியிருக்கிறார்.. தன்னம்பிக்கை பேச்சு என்ற தலைப்பில், ஆன்மிக சொற்பொழிவை நடத்தியிருப்பதாக கண்டனங்கள் குவிந்துள்ளன.

கடந்த காலங்களில் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுளால் படைக்கப்பட்டிருக்கிறது என்று மாணவர்கள் மத்தியில் மகாவிஷ்ணு பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.. யாருடைய அனுமதியில் இதுபோன்ற சொற்பொழிவாளரை அரசு பள்ளிகளுக்குள் அனுமதித்தார்கள்? என்று ஆசிரியர்களே கேள்வி எழுப்பி வருகிறார்கள். எனவே, இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கண்டித்து, SFI எனப்படும் இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், இன்று காலை அந்த பள்ளியின் திரண்டு கேள்விகளை எழுப்பினார்கள்.. நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்டு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே, மாற்று திறனாளிகள், ஏழைகளாக இருப்பவர்கள், முன் ஜென்ம பாவத்தின் காரணமாக அப்படி இருப்பதாக பேசியிருக்கிறார்.. இந்த பேச்சால் கோபமான பார்வை மாற்றுதிறனாளி ஆசிரியர் ஒருவர், மகாவிஷ்ணுவை தட்டிக்கேட்டிருக்கிறார்.. அதற்கு மகாவிஷ்ணு ஆசிரியரிடமே மோசமாக நடந்து கொண்ட வீடியோவும் இணையத்தில் பரவி, கடும் கண்டனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில், “பாஜக ஆளும் மாநிலம் ஒன்றில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற கல்வி நிலைக்குழு ஆய்வு மேற்கொண்டோம். அங்கன்வாடி ஊழியர்கள் கிராமத்தில் உள்ள கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியும், அங்கு குழந்தைகளுக்கு போதிப்பதைப் பற்றியும் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அப்போது அந்த மாநிலத் தலைமைக் கல்வி அதிகாரி, “கோயிலில் பாவ புண்ணியத்தைப் பற்றிப் போதிக்காமல் ஒருவனுக்கு வாழ்வியலை எப்படி போதிக்க முடியும்?” என்று கேட்டார்.

இன்று அதே கேள்வியை தமிழ்நாட்டு அரசுப் பள்ளியில் சிறப்பு விருந்தினராக வந்து ஒருவர் கேட்கிறார். மறுப்பு தெரிவிக்கும் ஆசிரியரைப் பார்த்து, “உங்கள் பெயரென்ன?” என்று கேட்கிறார். அந்த ஆசிரியரின் பெயர் ஜான்சன் ஆகவோ, ஜாஹீர் உசேனாகவோ இருந்திருந்தால் இன்று முதல் பள்ளிக் கல்வி பற்றிய பிரச்சனை ஆர். என். ரவியிடமிருந்து எச். ராஜாவுக்கு மாற்றப்பட்டிருக்கும். அவர்கள் தெரிந்தே செய்கிறார்கள். எது “நன்நெறி” என்பதை தமிழ்நாடு அரசின் கல்வித்துறை செயலில் காட்ட வேண்டிய நேரமிது” என்று தன்னுடைய பதிவில் கூறியுள்ளார்.