வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்று (சனிக்கிழமை) பெரம்பலூருக்கு வருகை தந்த அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிவடைய உள்ள சூழ்நிலையில் முன்பிருந்தது போன்று கிராமப்புறங்களுக்கு தனியாகவும் நகர்புறங்களுக்கு தனியாகவும் தேர்தல் நடைபெற உள்ளதா, அல்லது கிராமப்புறங்களுக்கு நகரப்புறங்களுக்கும் சேர்ந்து ஒன்றாக தேர்தல் நடத்தப்பட உள்ளதா என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி அதிக முதலீடுகளையும் வேலைவாய்ப்புகளையும் ஈர்த்துள்ளதாக தமிழக அரசு கூறிவந்த நிலையில், தமிழகத்தில் வெளிநாட்டினரின் முதலீடு ஐந்தாண்டுகளுக்கு முன்பு நான்காவது இடத்தில் இருந்து தற்போது ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து அதிக முதலீடுகளும் வேலைவாய்ப்புகளும் தமிழகத்திற்கு வந்துள்ளதாக திமுக அரசு வெற்று விளம்பரங்களை செய்து வருகிறது.
பள்ளி மாணவர்கள் மனதில் நல்ல உணர்வுகளையும் சிந்தனைகளையும் விதைக்க வேண்டும். சென்னை அசோக் நகர் அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தவறானது, கண்டிக்கத்தக்கது. மேலும் இது போன்ற ஒரு சம்பவம் இனி நிகழக் கூடாது. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியினர் மாநாடு நடத்த அனுமதி கேட்டால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு மாநாடு நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் விளையாட்டு துறையில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.