பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தி உள்ளார்.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.75 ரூபாயாகவும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், “ஒன்றிய அரசு அமைந்ததும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஈடாக பெட்ரோலிய பொருட்கள் விலையை குறைக்கவில்லை. கலால் வரி, செஸ், சர்சார்ஜ் என்று கூடுதல் வரிகளை விதித்து கடந்த ஒன்பது ஆண்டுகளில் 28 லட்சம் 33 ஆயிரம் கோடி அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டது” என்று குற்றம்சாட்டினார்.
ஒன்றிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சி 2014 இல் பதவி விலகுகிற போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 140 டாலராக இருந்தது என்ற அவர், “அப்போது பெட்ரோல் விலை ரூபாய் 72 ஆகவும், டீசல் விலை 50 ரூபாயாகவும் இருந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படுகிற இழப்பிற்கு 1 லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டது” என்று சுட்டிக்காட்டினார்.
2024 இல் தற்போது கச்சா எண்ணெய் விலை கடந்த 15 மாதங்களில் இல்லாத அளவிற்கு 70 டாலராக சரிந்துள்ளதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைகிற போது பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு குறைக்க வேண்டும். ஆனால், இன்று பெட்ரோல் விலை ரூபாய் 100.85 ஆகவும், டீசல் விலை ரூபாய் 92.34 ஆகவும் உள்ளது என்றும் விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து, “அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வோடு பணவீக்கம் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதனால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2014 இல் ரூபாய் 410 ஆக இருந்த கேஸ் சிலிண்டர் விலை, தற்போது 903 ஆக இருமடங்கிற்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. இது 120 சதவிகித உயர்வாகும். இதனால் தாய்மார்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்றும் குற்றம்சாட்டினார்.
மேலும், “சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்துள்ளது. அதற்கு இணையாக பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். விலையை குறைக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்ட மக்களின் கடுமையான போராட்டத்தை ஒன்றிய அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று செல்வப்பெருந்தகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.