சென்னை தனியார் மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், நுரையீரல் தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்காக சில ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 3-ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை அமைந்தக்கரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு மருத்துவர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
அவரது உடல்நிலை தொடர்பாக, நேற்று எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் இயக்குநர் மருத்துவர் ஆனந்த் மோகன் பாய் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “த.வெள்ளையன் நுரையீரல் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள அவரை மருத்துவ நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதைய நிலையில், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் இன்று (செப்.10) காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.