கோவை ஹோட்டல் உரிமையாளரிடம் மன்னிப்பு கோரிய அண்ணாமலை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடனான தனிப்பட்ட சந்திப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவை பொதுவெளியில் பாஜகவினர் பகிர்ந்தமைக்காக கோவை அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மன்னிப்புக் கோரியுள்ளார்.

தமிழகம் வருகை தந்துள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடலையும் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில், கோவை கொடிசியா அரங்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விதிப்பு குறித்து பேசினார்.

அப்போது, “உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிருக்கும் ஒவ்வொரு மாதிரியான வரி விதிப்பு இருக்கிறது. ஒரே மாதிரி வரி விதிக்க ஆலோசனை செய்யுங்கள்” என்பது குறித்து சீனிவாசன் சில நிமிடங்கள் பேசினார். இதற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் விளக்கம் அளித்திருந்தார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று வேகமாக பரவியது.

இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், மத்திய நிதி அமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, ‘தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாஜகவினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-

அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.