எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும்: திருமாவளவன்

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அனைத்து அரசு மதுக்கடைகளையும் மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது:-

கட்டாயம் மதுக்கடைகளை மூட முடியும் என்ற நம்பிக்கையோடு நாம் களத்தில் நிற்க வேண்டும். அதுதான் முக்கியம். நாம் தேர்தல் கணக்குக்காக இதனை கூறியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் கூறுகின்றனர். என்ன வேண்டும் என்றாலும் சொல்லிக் கொள்ளட்டும். அதைப் பற்றி ஒரு கவலையும் இல்லை. திமுகவை நேரடியாக சொல்வதற்குப் பயந்து கொண்டு பூசி, மெழுகி தேசிய கொள்கை என்று டைவர்ட் செய்வதாக கூறி வருகின்றனர். நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ள ஞானம் வேண்டும். இதனைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு சக்தி தேவை. தமிழ்நாட்டில் மதுக் கடைகளை மூட வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அதில் எந்த தயக்கமும் எங்களுக்கு இல்லை. திமுக தலைமையில் இருக்கிற தோழமைக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில் இருந்து கொண்டே பேசுகிறது. ஆனால், இதனை யாரும் பாராட்ட மாட்டார்கள். கூட்டணியில் இருந்து கொண்டே கேள்வி கேட்கவில்லை என்று கேட்பார்கள். கேள்வி கேட்டால் ஏன் கூட்டணியில் இருந்துகொண்டு அங்கிருந்தே கேள்வியை கேட்கிறீர்கள் என்பார்கள். அவர்களுடைய ஒரே நோக்கம் கூட்டணியில் இருந்து விலகி வந்து பலவீனப்படுத்த வேண்டும் என்பதுதான்.

கூட்டணியில் இருந்துகொண்டே கேள்வி கேட்பதற்கு ஒரு கெத்து வேண்டும். அது விடுதலைக் கட்சிக்குத்தான் இருக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசு மதுபானக் கடைகளை மூடினால் எத்தனை விஜய் வந்தாலும் திமுகதான் வெற்றி பெறும். இதனால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு என்ன பலன் என்று கேட்டால், மதுபானக் கடைகளை மூடுவதே எங்களுக்கு வெற்றிதான் என்று கூறியதோடு, ஸ்டாலினை விமர்சிக்க எந்த தயக்கமும் இல்லை. அப்படியிருந்தால் இதுபோன்ற ஒரு முடிவையே எடுத்திருக்க முடியாது. தேர்தல் களத்தில் பாதிப்பு ஏற்படும், கூட்டணியில் சிக்கல் ஏற்படும் என்ற நிலை வந்தால் கூட மதுவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து ஒருபோதும் விலகக் கூடாது. இந்தப் போராட்டத்தின் மூலம் எந்தவிதப் பிரச்னை வந்தாலும் அதனை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில், மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு காந்தி ஜெயந்தியன்று அக்டோபர் 2 ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், அக்கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மாநாட்டில் அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்பதற்கு வாய்ப்பு இருப்பதால் கூட்டணி கணக்குகளில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதற்கிடையே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல்.முருகன் விடுதலைச் சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு வரவேற்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.