கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுவதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது: நாராயணசாமி

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது:-

இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், லடாக் பகுதியை சீனா ஆக்கிரமித்து வருவதாக காங்கிரஸ் தெரிவித்ததை பிரதமர் மோடி மறுத்தார். ஆனால் தமிழக ஆளுநர் ரவி தற்போது, இந்தியாவில் 5,500 கி.மீ பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மோடி, ரவி இவர்களில் யார் சொல்வது உண்மை என கேள்வி எழுகிறது. கச்சா எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலையை குறைக்க வேண்டும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பு புதுச்சேரி அரசில் காலியாக உள்ள 950 இடங்களை நிரப்ப முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். அதில் எந்தெந்த தேதிகளில் விண்ணப்பம் கோரப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், விண்ணப்பம் கோரவில்லை. இதனால் படித்த இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது படித்தோருக்கு ரங்கசாமி செய்யும் துரோகம் ஆகும். கடந்த 2021 தேர்தல் அறிக்கையில் 10 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்த ரங்கசாமி, 600 இடங்களைக்கூட நிரப்பவில்லை.

பாண்டி மெரினாவில் டெண்டர் எடுத்த நபர்கள் விதிமீறி தொழில் செய்வதாக ஆதாரங்களுடன் துணை நிலை ஆளுநரிடம் கடந்த 5-ம் தேதி புகார் தந்துள்ளேன். துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன் விதிமீறலுக்கு துணைபோன சுற்றுலாத் துறை, துறைமுகத் துறை மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி தந்தோர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளேன். நான் கொடுத்த கடிதத்தை பெற்றதற்காக ஆதாரம் இதுவரை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து வரவில்லை. ஆளுநர் நடுநிலையாக இருக்கிறாரா – துறைமூலமாக விசாரணை வைத்து டெண்டரை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பாரா- இல்லையென்றால் ஆட்சியாளர்களுக்கு சாதகமாக செயல்படுவாரா என்பது போகப்போகத் தெரியும். உரிய நடவடிக்கை எடுக்க துணைநிலை ஆளுநர் விசாரணை நடத்தி விதிமீறி இருந்தால் டெண்டரை ரத்து செய்ய வேண்டும். பாண்டி மெரினா தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றம் செல்வோம்.

கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதை புதுச்சேரி காங்கிரஸ் எதிர்க்கிறது. மேகேதாது அணை கட்டினால் காடு அழியும். காவிரிப் பாசன விவசாயிகள் தெரிவித்துள்ளபடி ஒகேனக்கல் அருகே தமிழகம் புதிய அணையை கட்டுவது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.