செம்மொழி தமிழாய்வு துணை தலைவராக சுதா சேஷய்யன் நியமனம்!

செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்விஅமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்கு செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன. தமிழக முதல்வரை தலைவராக கொண்டு செயல்பட்டு வரும்இந்நிறுவனத்தின் இயக்குநராக பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்விஅமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அவர் பதவியேற்கும் நாளில் இருந்து 3 ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார். மருத்துவர் சுதா சேஷய்யன் அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியையாகவும் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் துணைவேந்தராகவும் பணியாற்றியுள்ளார். தமிழ் ஆர்வலரான அவர், 30-க்கும் மேலான இலக்கிய, ஆன்மிக நூல்களை எழுதியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி, சொல்லின் செல்வர் உள்ளிட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.