திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்: சீமான்!

திருமாவளவன் தன்னுடைய நிலைப்பாட்டில் இனிவரும் காலங்களிலும் உறுதியாக இருக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து சீமான் மதுரையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவன் தைரியத்தைப் பாராட்டுகிறேன். 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் இதே முழக்கத்தை வைத்து திருமாவளவன் தேர்தலை சந்தித்து இருக்கலாமே?. ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் நிலைப்பாட்டில் திருமாவளவன் பின் வாங்காமல் இருக்க வேண்டும். மதுவை ஒழிப்பதில் யாருக்கும் மாற்று கருத்தில்லை, மது ஒழிப்பு மாநாட்டுக்கு திருமாவளவன் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை அழைக்கவில்லை. எதிர்வரும் தேர்தலில் மது ஒழிப்புக்கு ஆதரவாக உள்ள கட்சிகளுடன் திருமாவளவன் அணி சேர வேண்டும். ஆட்சி அதிகாரித்தில் பங்கு வேண்டும் என திமுகவையும் சேர்த்து தான் திருமாவளவன் சொல்கிறார்.

ஆந்திரத்தில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாணுக்கு கூட்டணி ஆட்சியில் பங்கு கொடுத்தது போல கூட்டணி கட்சிகளுக்கு திமுக ஆட்சியில் பங்கு கொடுக்குமா?. கருணாநிதி குடும்பத்தில் தான் துணை முதல்வர்கள் இருப்பார்களா?. நாட்டில் யாரும் துணை முதல்வர் ஆகக்கூடாதா?. இவர்கள் வீட்டில் இருந்து தான் துணை முதல்வராக வருவார்களா?. இதை எதிர்த்து தான் திருமாவளவன் கேள்வி கேட்கிறார். இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும்.

விஜய் மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பதற்கு நாள்கள் நகர்த்தப்பட்டு வருகிறது. அடிப்படை வசதிகளை மேம்படுத்தி மாநாட்டுக்கு அனுமதி பெற கால அவகாசம் வேண்டும். புதிதாக கட்சி தொடங்கும் போது அதிகாரத்தில் உள்ளவர்கள் நெருக்கடி தருவது வாடிக்கையாக உள்ளது. விஜய் அரசியலுக்கு புதிது, நான் கட்சி துவங்கிய போது பல இன்னல்களை சந்தித்தேன். விஜய் தற்போது தான் கட்சி துவங்கி உள்ளார், அவர் இன்னும் பல இன்னல்களைச் சந்திக்க வேண்டி உள்ளன.

வெளிநாடு முதலீடுகளை ஈர்ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தமிழகத்தில் செயல்பட்ட பல நிறுவனங்கள் ஏன் தமிழகத்தை விட்டு வெளியேறியது? 7,000 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்கள் எங்கே முதலீடு செய்ய போகிறது. ஜெயலலிதா காலத்தில் இருந்தே முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது, அப்புறம் ஏன் தமிழ்நாடு வளர்ச்சியடையவில்லை. 31 இலட்சம் அல்ல 3,000 பேருக்கு வேலை கொடுத்ததை நிரூபிக்க முடியுமா? இவ்வாறு அவர் கூறினார்.