“முதல்வரின் வெளிநாட்டு பயணம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்” என்று, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிகவின் 20-ம் ஆண்டு தொடக்க விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (செப்.14) நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கட்சியின் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து அலுவலகத்துக்கு புதிதாக வைக்கப்பட்டுள்ள ‘கேப்டன் ஆலயம்’ எனும் பெயர் பலகையையும் திறந்து வைத்தார். மேலும், பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம், கட்சியில் உறுப்பினர் சேர்க்கை பணிகளையும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் தேமுதிக துணைச் செயலாளர் ப.பார்த்தசாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அதன்பின் பிரேமலதா நிருபர்களிடம் கூறியதாவது:-
தேமுதிகவின் 20-வது ஆண்டு தொடக்க விழா தொண்டர்களுடன் இணைந்து மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. பத்ம பூஷன் விருது, கேப்டனின் பிறந்த நாள், தேமுதிக 20-ம் ஆண்டு தொடக்கம் என முப்பெரும் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறோம். இனி தேமுதிக அலுவலகம் ‘கேப்டன் ஆலயம்’ என்று அழைக்கப்படும். அதற்கான பெயர் பலகையை திறந்து வைத்துள்ளோம். தடைகளை தகர்த்து தேமுதிக தனது லட்சியங்களை நிச்சயம் வென்றெடுக்கும்.
முதல்வர் வெளிநாட்டு பயணம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், அவர் மருத்துவச் சிகிச்சைக்காக சென்றதாகவும் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். எனவே, வெளிநாட்டு பயண விவகாரத்தில் ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகளின் விவரம், எத்தனை பேர் வேலைவாய்ப்பை பெற உள்ளனர் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
ஜிஎஸ்டி பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஜிஎஸ்டி வரியால் சிறு, குறு தொழில்களை நடத்துபவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அன்னாபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் தனது கருத்தை எடுத்துச் சொன்னார். அதை நிதி அமைச்சரும் இயல்பாகவே எடுத்துக்கொண்டார். இதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஊடகங்கள்தான் அதை சர்ச்சையாக்கி விட்டன. அவரே தான் நிதி அமைச்சரைப் பார்க்க வேண்டும் எனக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதை திமுக, காங்கிரஸ் பெரும் விவகாரமாக பார்க்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை இது யதார்த்தமான ஒன்றாகவே கருதுகிறேன்.
மது ஒழிப்பு தொடர்பான நிகழ்ச்சிகளை யார் நடத்தினாலும் வரவேற்கப்பட வேண்டிய அம்சம். அதன்படி விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டுக்கு எனது வாழ்த்துகள். இதுவரை எங்களுக்கு அழைப்பு வரவில்லை. அழைப்பு விடுத்தால் ஆலோசிக்கிறோம்.” என்றார். அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை இடம் வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு “அனைவரும் பொறுத்திருந்து பாருங்கள்” என்று அவர் கூறினார்.