நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்: கெஜ்ரிவால்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து நேற்று மாலை அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, “என் மன உறுதி 100 மடங்கு உயர்ந்துள்ளது. என் பலம் 100 மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம்” என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனையடுத்து அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நேற்று செப்.13) நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, சிறையில் இருந்துநேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டார்.

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவர உள்ளதை அறிந்த ஆம் ஆத்மி தொண்டர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அவரை சிறைக்கு வெளியே குழுமி வரவேற்றனர். இதனையடுத்து, தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-

லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான மக்களின் ஆசீர்வாதம் காரணமாகவே நான் இங்கு நிற்கிறேன். கனமழைக்கு மத்தியில் இங்கு லட்சக்கணக்கானோர் வந்திருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். என் விடுதலைக்காக பிரார்த்தனை செய்த மக்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

என் வாழ்க்கை நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. என் வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும், எனது உடலின் ஒவ்வொரு துளி ரத்தமும் நாட்டுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நான் வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை பார்த்திருக்கிறேன், நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன். இவை அனைத்திலிருந்தும் கடவுளின் ஆசீர்வாதத்தால் நான் மீண்டு வந்திருக்கிறேன்.

நான் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்தேன். இருந்தும், என்னை சிறையில் அடைத்தார்கள். கெஜ்ரிவாலை சிறையில் அடைத்தால் அவரது மன உறுதி உடைந்து விடும் என்று நினைத்தார்கள். இன்று நான் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டேன். என் மன உறுதி 100 மடங்கு உயர்ந்துள்ளது. என் பலம் 100 மடங்கு அதிகரித்துள்ளது. சிறைகளால் என்னை பலவீனப்படுத்த முடியாது. நாட்டை பலவீனப்படுத்தும் தேச விரோத சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.